திருவாரூர் அருகே சோகம் சென்னை இன்ஜினியர் மாணவியுடன் தற்கொலை: காதலுக்கு எதிர்ப்பால் விபரீதம்

மன்னார்குடி: திருவாரூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நர்சிங் மாணவியுடன் சென்னை இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பருத்திக்கோட்டையை சேர்ந்த திரிசங்கு மகன் பாரதிராஜா (25). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அடுத்த காடாம்சேத்தியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் நிஷா (17). தனியார் கல்லூரியில் நர்சிங் டிப்ளமோ முதலாண்டு படித்து வந்தார். தூரத்து உறவினர்களான இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதற்கு நிஷா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சென்னைக்கு சென்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நாகப்பட்டினம் சென்ற பாரதிராஜா, காதலி நிஷாவை அழைத்துக் கொண்டு மன்னார்குடி வந்தார். பின்னர் ரயிலில் இருவரும் சென்னைக்கு செல்ல திட்டமிட்டு மன்னார்குடி ரயில் நிலையம் வந்தனர். அதற்குள் ரயில் புறப்பட்டு சென்று விட்டது. இதையடுத்து, பாரதிராஜா நண்பர் ஒருவருக்கு போன் செய்து பைக்கை எடுத்து வருமாறு கூறியுள்ளார். பின்னர் நள்ளிரவில் பைக்கில் காதலி மற்றும் நண்பருடன் பருத்திக்கோட்டைக்கு சென்றார்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குளம் அருகே பாரதிராஜாவும், நிஷாவும் இறங்கி கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக வந்த கிராம மக்கள், இரண்டு பேரும் சடலமாக தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வடுவூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில், காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் குளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் தனித்தனி  கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: