×

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியில் அரியவகை பறவைகள் கண்டுபிடிப்பு: 2ம் கட்ட கணக்கெடுப்பில் தகவல்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதிகளில் 2வது கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகள் கண்டறிப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவி உள்ளது. இந்த அலையாத்திக்காட்டில் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பறவைகள் உள்ளன. சீசன் நேரத்தில் லட்சக்கணக்கான பறவைகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகை அரிய பறவைகள் வருகிறது.

மார்ச் மாத முடிவு வரை இந்த அரியவகை பறவைகள் இருக்கும். முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. 111 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாசன ஏரியை உள்ளடக்கிய இந்த சரணாலயத்தை வனத்துறை பராமரித்து வருகிறது. இங்கு நவம்பர் துவங்கி பிப்ரவரி வரையிலும் பறவைகள் வரத்து அதிகமிருக்கும். சாம்பல் நாரை, வெண் கொக்குகள், கால்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், சிறுதலைவாத்து உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவையினங்கள் சரணாலய ஏரியில்  காணப்படுகின்றன. அதேபோல் தொண்டியக்காடு திட்டு ஏரி மட்டுமின்றி முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஈரநில பகுதிகளில் அரியவகை வெளிநாட்டு பறவைகள் காணப்படுவது வழக்கம்.

இப்பகுதிகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும், 2 முறை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதம் முதல்கட்ட கணக்கெடுப்பு நடந்த நிலையில், 2ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுமுன்தினம் துவங்கியது. இதில் திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சதீஷ், மாவட்ட வனஅலுவலர் அறிவொளி ஆகியோர் மேற்பார்வையில் முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனி, பறவைகள் ஆராய்ச்சியாளர் பிஎன்ஹெச்எஸ் இயக்குநர் பாலசந்திரன் தலைமையில் 50பேர் கொண்ட குழுவினர் அலையாத்திகாடு கடற்கரை சார்ந்த ஈரநில பகுதிகளில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை நடந்த கணக்கெடுப்பு பணியில் லட்சக்கணக்கான அரிய வகை பறவைகள் கண்டறிப்பட்டுள்ளது. இதன் முழு விபரம் மற்றும் எண்ணிக்கை நாளை (இன்று) தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Muthupettai Alayathikkadu , Discovery of rare species of birds in Muthupettai Alayathikkadu area: Information from phase 2 survey
× RELATED முத்துப்பேட்டை அலையாத்திக்காடு...