தாசில்தார்களுக்கு 20 நாட்களில் துணை கலெக்டர் பதவி உயர்வு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

அருப்புக்கோட்டை: தாசில்தார்களுக்கு துணை கலெக்டர் பதவி உயர்வு இன்னும் 20 நாட்களில் வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை  கிராம உதவியாளர் சங்க 2வது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று நடந்தது. மாநில முன்னாள் துணைத்தலைவர் வின்சென்ட், மாவட்டத் தலைவர் லியாகத் அலி கொடியேற்றினர். மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகையில், ‘‘கலைஞர் ஆட்சியில் தான் தலையாரி என்ற பெயரை கிராம உதவியாளர் என்று மாற்றினார்.

தற்போது வருவாய்த்துறை கிராம உதவியாளர் என்ற பதவியின் பெயரை  துணை கிராம நிர்வாக அலுவலர் என மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளீர்கள். மேலும் கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதியை 6 ஆண்டுகள் பணிபுரிந்தால் போதும் என திருத்தம் செய்ய கோரிக்கை வைத்துள்ளீர்கள். வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தாசில்தார்களுக்கு துணை கலெக்டர் பதவி உயர்வு இன்னும் 20 நாட்களில் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் காலிப்பணியிடத்தில்  ஆயிரம் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: