×

கோவையில் தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப்பொருள் கண்காட்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை: கோவை வஉசி மைதானத்தில் தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களின் சாரஸ் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராமப்புற கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வரும் தேசிய அளவிலான சாரஸ் கண்காட்சி, கோவை அவினாசி சாலை வஉசி மைதானத்தில் நேற்று துவங்கியது. வருகிற 12ம் தேதி வரை நடக்கிறது.

கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். கண்காட்சியில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மகளிர் சுய உதவி குழுக்களின் கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனைவெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

* 81 ஜோடிகளுக்கு திருமணம்
கோவை  மாவட்ட  ஒருங்கிணைந்த திமுக  சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில் 81 ஜோடிகளுக்கு திருமண விழா நேற்று  நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசு வழங்கினார்.

* ரேக்ளா பந்தயம்
கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளையொட்டி இரட்டை மாட்டு வண்டி ரேக்ளா பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் 400 ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3 பவுன் தங்க காசு, இரண்டாம் பரிசாக 2 பவுன் தங்க காசு, மூன்றாம் பரிசாக 1 பவுன் தங்க காசு வழங்கப்பட்டது.

Tags : Handicraft Exhibition of ,National Level Women Self Help Groups ,Coimbatore ,Minister ,Udayanidhi Stalin , Handicraft Exhibition of National Level Women's Self Help Groups in Coimbatore: Minister Udayanidhi Stalin inaugurates
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...