சென்னை: ‘‘அரசைத் தேடி மக்கள் சென்ற காலம் மாறி, மக்களைத் தேடி அரசு வந்து கொண்டிருக்கிறது. உங்களது கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலிக்கப்படும், நம்பிக்ைகயோடு காத்திருங்கள்’’ என மதுரையில் நடைபெற்ற கள ஆய்வு கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசின் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகள், பணிகளின் முன்னேற்றம் அதன் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், மதுரை மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டம், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம், நேற்று மதுரை வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனியை சேர்ந்த தொழிற்சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர்களுடன் பேசினார். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற ஒரு புதுமையான திட்டத்தை அறிவித்து, தொடர்ந்து ஒவ்வொரு மண்டலம் வாரியாக நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். கடந்த பிப். 2ல் தொடங்கி தற்போது 2 மண்டலத்தில் ஆய்வுப்பணியை முடித்திருக்கிறேன். மூன்றாவது மண்டலமாக, மதுரை மண்டலத்தில் மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருக்கும் முக்கிய சங்கங்கள், சங்கங்களின் நிர்வாகிகளிடையே கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.
உங்களின் கருத்துக்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள், சிலர் மனுக்களும் தந்திருக்கிறீர்கள். உங்களைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். மக்கள் அரசைத் தேடிப்போன காலம் மாறி, மக்களை தேடி அரசு வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிலையில்தான் என்னுடைய தலைமையில் இருக்கக்கூடிய இந்த அரசு மக்களுடைய பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில்தான், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை உருவாக்கி அந்தப்பணியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். நீங்களும் ஆர்வத்தோடு மட்டுமல்ல, நம்பிக்கையோடு இங்கு வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையோடு உங்கள் பிரச்னைகளை இங்கே சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். நிச்சயமாக அதை பரிசீலிப்போம்.
ஏற்கனவே தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு முன் அதற்கான தனி ஆலோசனை கூட்டத்தை மதுரையில் நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக பல மேல் நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதும், வருகிற 20ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு, அடுத்ததாக வேளாண்துறை பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்யப்போகிறோம். வெறும் பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்துவிட்டு போய் விடமாட்டோம். எப்படி தலைவர் கலைஞர் பட்ஜெட் தாக்கல் செய்கிறபோது, ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட வணிகர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், அனைத்துத்துறைகளைச் சார்ந்திருக்கின்ற அதிகாரிகளையெல்லாம் அழைத்துப்பேசி, என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம், எதற்கு வரிவிலக்கு அளிக்கலாம், எதற்கெல்லாம் வரிகள் விதிக்கலாம் என்பதையெல்லாம் பற்றி கருத்துக்களைக் கேட்டு, அவர்களுடைய அறிவுரைகளையும் கேட்டு, அதனடிப்படையில்தான் பட்ஜெட்டையே தாக்கல் செய்வார்.
விவாசாயிகளுக்கான தனி பட்ஜெட் தயாரிக்கும்போது கூட, அந்தத்துறையின் அமைச்சர், துறை அதிகாரிகள், மண்டலம் வாரியாகச் சென்று விவசாய சங்கப்பிரதிநிதிகளை அழைத்து பேசி, அவர்களுடைய கருத்துக்களை கேட்டுத்தான் வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேனி மாவட்ட தோட்டக்கலை பயிர் விவசாயிகள் முக்கியமான கருத்துக்களை, கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறீர்கள். அதையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்கின்ற உறுதியை அளிக்கிறேன். ராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மீனவ சங்கப்பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் அரசு பரிவோடு பரிசீலிக்கும்.
ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களை சார்ந்திருக்கக்கூடிய பிரதிநிதிகளாகிய நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிவித்து, அதற்கான தீர்வுகளையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களையெல்லாம் குறித்து வைத்திருக்கிறோம். நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எந்த நம்பிக்கையோடு வந்தீர்களோ அந்த நம்பிக்கையோடு செல்லுங்கள். அந்த நம்பிக்கையோடு காத்திருங்கள். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நிச்சயமாக நாங்கள் இருப்போம். ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை எப்படியிருந்தது என்று உங்களுக்குத் தெரியும். எவ்வளவு கடுமையான சூழ்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம்.
கொரோனா ஒரு பக்கம், நிதிநிலை மறு பக்கம். இதையெல்லாம் சமாளித்து ஓரளவு பணி செய்து கொண்டிருக்கிறோம். அறிவித்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லவில்லை. இன்னும் சில திட்டங்கள் மீதம் இருக்கிறது. அதையும் நிறைவேற்றக்கூடிய சூழ்நிலையில்தான் எங்களுடைய பணி அமைந்திருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக, படிப்படியாக, உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தனிச்செயலாளர் உதயச்சந்திரன். கலெக்டர்கள் அனீஷ்சேகர் (மதுரை), விசாகன் (திண்டுக்கல்), ஜானி டாம் வர்கீஸ் (ராமநாதபுரம்), மதுசூதன ரெட்டி (சிவகங்கை), ஷஜீவனா (தேனி) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
