சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிவரும் மின் பெட்டிகள்: அபராதம் விதிக்க கோரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் பெட்டிகள், போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளதால், மின் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று போஸ்டர் ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நவீன தொழில்நுட்பங்களையும், நுண் மின் கட்டமைப்புகளையும் பயன்படுத்தி மின் சேமிப்பை அதிகரித்தல் மற்றும் மின் விநியோகத்தின் போது இழப்புகளை குறைத்தல் ஆகியவற்றிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் அதிகபட்ச மின் தேவை இருக்கிறது. பாதுகாப்பான மின் கட்டமைப்புகளை அமைப்பதற்காகவும், விபத்துகளை தடுக்கவும் சென்னை மாநகரம் மற்றும் விரிவுப்படுத்தப்பட்ட சென்னை மாநகர பகுதிகளான பெரம்பூர், ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் புதைவடங்கள் அமைத்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பகுதிக்கும் மின் மாற்றிகள் மற்றும் ‘‘பில்லர் பாக்ஸ்’’ எனப்படும் மின் பெட்டிகள் ஆகியவை அமைக்கப்பட்டு மின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்யப்படுகிறது. ஆனால் மின்மாற்றி கட்டமைப்புகளில் அதிக பரமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்மாற்றிகளுக்கு மாற்றாக கடந்த 2021ம் ஆண்டு வளைய சுற்றுத்தர அமைப்புகள் (ஆர்.எம்.யூ) கொண்டு வர திட்டமிடப்பட்டது.

மின்மாற்றிகளில் இன்சுலேட்டர் வெடிப்பது, இணைப்பு கம்பி அறுந்து போவது, மின்னூற்றுகளில் பழுது, காற்றுத் திறப்பான்களில் பழுது போன்ற காரணங்களால் மின்தடை ஏற்படுகிறது. மின்மாற்றிகளில் பரமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் மின் தடை ஏற்பட்டு மின் நுகர்வோர்கள் பாதிப்படைகின்றனர். இதையடுத்து பராமரிப்பு இல்லா உயரழுத்த மின் கட்டமைப்புகள் மற்றும் மின்தடை ஏற்படும் நேரத்தை குறைக்க கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.1,819 கோடியில் 5,692 மின்மாற்றிகள் வளைய சுற்றுத்தர அமைப்புகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டு 5,692 வளைய சுற்றுத்தர அமைப்புகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. மின்மாற்றிகளுடன் ஒப்பிடும் போது வளைய சுற்றுத்தர அமைப்புகள் முலம் பராமரிப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். வளைய சுற்றுத்தர அமைப்புகள் மின்மாற்றிகளை விட சிறிய இடத்திலேயே அமைத்திட முடியும். வளைய சுற்றுத்தர அமைப்புகள் மூலமாக, மழைக் காலங்களில் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க முடியும்.

மேலும் எந்த பகுதியில் பழுது ஏற்படுகிறது என்பதை எளிதாக கண்டுபிடித்து, விரைவில் பழுதை சரி செய்ய முடியும். ஒவ்வொரு வளைய சுற்றுத்தர கருவியும் குறைந்தபட்சம் இரு மின்வழிப் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு மின்பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு பாதையின் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இதன் காரணமாக மின் தடை நேரம் குறைகிறது. மின்சாரம் செல்லும் எந்த பகுதியும் வெளியில் தெரியாததால் பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்புகளில் பொதுமக்கள் எளிதில் தெரிந்துக்கொள்ளும் வகையில் மின்னகம் எனப்படும் மின்நுகர்வோர் சேவை மையத்தின் தொடர்பு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்களிடம் இருந்து பெறப்படும் மின்சாரன் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் மூலம் உடனடியாக தீர்வு காணப்படுகிறது.  

இந்நிலையில் இந்த வளைய சுற்றுத்தர அமைப்புகளிலும், மின் பெட்டிகளிலும் தனியார் நிறுவனங்களின் விளம்பரம், பொதுமக்களின் குடும்ப நிகழ்ச்சி, அரசியல் கட்சிகளில் நிகழ்ச்சி, வாழ்த்து, இரங்கல் உள்ளிட்ட ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்படுவதால், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் மின் வாரிய ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வளைய சுற்றுத்தர அமைப்புகள் தற்போது செயல்பட்டில் இருக்கிறது, சென்னையில் தற்போது 10,000க்கும் மேற்பட்ட ஆர்.எம்.யூக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் வளைய சுற்றுத்தர அமைப்புகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வளைய சுற்றுத்தர அமைப்பின் மதிப்பு ரூ.15லட்சம் ஆகும். அதனோடு பில்லர் பாக்ஸ் எனும் மின் பெட்டிகள் ஒன்றின் மதிப்பு ரூ.60,000 ஆகும். மின் வாரிய பணியாளர்கள் பராமரிப்பு பணிக்கோ, பழுது பார்க்க செல்லும் போதோ இந்த மின் பெட்டிகள் மற்றும் ஆர்.எம்.யூக்கள் முழுவதும் போஸ்டர்கள் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறையும் போஸ்டர்களை அகற்றி அதன் பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும்  மின்னகத்தின் தொடர்பு எண் குறித்த தகவல் இந்த அமைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் அதன் மீதும் போஸ்டர்களை ஒட்டி மக்களுக்கு தெரிய வேண்டிய மின்னகம் சேவை மையத்தின் தொடர்பு எண்ணையும் மறைத்து விடுகின்றனர்.  மேலும் மின்மாற்றிகளின் கீழ் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த குப்பைகள் தீ பிடித்து அடிக்கடி மின்மாற்றிகள் எறிந்து விபத்துகள் ஏற்படுகிறது. குப்பைகள் இருப்பதால் பரமரிப்பு பணிகளை மேற்கொள்ள செல்லும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். இது போன்ற போஸ்டர் ஒட்டப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் குப்பைகளை மின்மாற்றிகளின் கீழ் கொட்டாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* விதிமீறல் சென்னை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின் பெட்டிகள் மீது போஸ்டர் ஒட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* மாயமான புகார் எண் மின்சாரத்துறை சார்பில் மின்சாரம் தொடர்பான அனைத்து குறைகளுக்கும் பொதுமக்களுக்கு தீர்வுகாணும் வகையில் ‘‘மின்னகம்’’  என்ற சேவை மையம் தொடங்கப்பட்டன. இதன் தொடர்பு எண்கள் அனைத்து மின் பெட்டிகளிலும் ஒட்டப்பட்டிருக்கும். இதனை மறைக்கும் விதமாக அதன் மீது போஸ்டர்களை ஒட்டி செல்வதால் அவசரகாலத்தில் பொதுமக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

* ஒவ்வொரு முறையும் மின் பெட்டிகளில் உள்ள போஸ்டர்களை அகற்றி அதன் பின்னரே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது

Related Stories: