பெரம்பூர்: ஓட்டேரியில் நன்னடத்தை விதி மீறிய ரவுடியை 282 நாட்கள் சிறையில் அடைக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஓட்டேரி டோபிகானா குடிசை பகுதியைச் சேர்ந்தவர் கமல் (எ) தம்பா (33). இவர் மீது புளியந்தோப்பு, வேப்பேரி, ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புளியந்தோப்பு துணை கமிஷனர் முன்பு ஆஜரான இவர், இனிமேல் குற்றச் செயலில் ஈடுபடமாட்டேன், என பிரமாண பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
ஆனால், அதை மீறி கடந்த 11ம் தேதி வேப்பேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வழிப்பறியில் ஈடுபட்டு வேப்பேரி போலீசாரால் கமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நன்னடத்தை விதிமீறி குற்றசெயலில் ஈடுபட்ட கமல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் துணை கமிஷனர், கமலை 282 நாட்கள் சிறையில் அடைக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
