தாம்பரம் பகுதியில் பாஜ கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு

தாம்பரம்: தாம்பரத்தில் பாஜ கொடி கம்பம் வைப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் கம்பம் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் மாநகராட்சி, 63வது வார்டு, நாகாத்தம்மன் கோயில் தெருவில் பாஜ சார்பில் அக்கட்சியின் கொடிக்கம்பம் வைக்க திட்டமிடப்பட்டு நேற்று முன்தினம் இரவு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக என பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த சேலையூர் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று பாஜ செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜவினர் அப்பகுதியில் கொடிக் கம்பத்தை அமைத்து கட்சியின் கொடியை ஏற்றிவைக்க வந்தனர்.

அப்போது திமுக, காங்கிரஸ் கொடிக் கம்பங்கள் அருகே பாஜ கொடிக் கம்பம் வைக்ககூடாது என தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜோதிகுமார், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாஜவினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் சேலையூர் போலீசார் பாதுகாப்புடன் பாஜவினர் கொடிக் கம்பத்தை அமைத்து, அதில் அக்கட்சியின் கொடியை ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: