தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், தற்போது குளிர்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து பனிப் பொழிவும் குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் விரைவில்  கோடை காலம் தொடங்க உள்ளது. அதன் அறிகுறியாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ் வெயில் நேற்று நிலவியது. குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 16.2 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவியது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம், தஞ்சாவூர், கோவை, கரூர், கடலூர், நாமக்கல் மாவட்டங்களில்  மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 4.0 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பம் இருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட  1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி வரையில் இயல்பைவிட குறைவாக வெப்ப நிலை இருந்தது. அத்துடன் நீலகிரி, சேலம்,  திருப்பத்தூர், திருவள்ளூர், கோடை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் இயல்பைவிட குறைவான வெப்ப நிலை இருந்தது.

இந்நிலையில், கிழக்கு  திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக   தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை  இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். 8 மற்றும் 9ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதை ஒட்டிய மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் வெயில் நீடிக்கும் என்பதால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் கூடுதலாக இருக்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: