×

இன்டர்நெட் பயன்படுத்தும்போது கவனம் யூடியூப், வங்கி லோன் தகவலில் எச்சரிக்கை தேவை: பொதுமக்களுக்கு காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: இணைய வழியில் உலாவும் போது, யூடியூப், வங்கி லோன் தகவலில் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் பொதுமக்களுக்கான சேவைகளும், வாய்ப்புகளும் அதிக அளவில் கிட்டும் அதே நேரத்தில் இணைய வழிக்குற்றமான சைபர் குற்றங்களும் தினந்தோறும் உருமாறி கொண்டே வருகின்றன. சமீபகாலத்தில் இரண்டு புதுவகை சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது.

1)Youtube வீடியோ மூலம் குற்றம் நடப்பது எப்படி?
குற்றவாளிகள் டெலிகிராம் அல்லது வாட்ஸ் அப்பில் யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று தொடர்பு கொள்வர். அவ்வாறே சில வீடியோக்களை லைக் செய்த பின்னர் பகுதி நேர வேலை அல்லது சிறிய அளவிலான முதலீடு செய்து பெரும் லாபம் அடையலாம் என்று ஆசை காட்டுவார். அதை உண்மை என்று எண்ணி தொடர்ச்சியாக பேசும் பொது மக்களிடம் ஒரு போலி வெப்சைட்டை கொடுத்து லாகின் செய்ய சொல்லி முதலில் சிறிய அளவில் பணத்தைக் கட்ட சொல்வர். முதலில் லாபமாக சில ஆயிரங்களில் பணம் திரும்ப கிடைக்கும். அதை நம்பி அதிக அளவில் பணத்தை பொதுமக்கள் செலுத்துவர். அதற்கேற்றார் போல் பெரிய தொகை அந்த வெப்சைட்டில் காட்டப்படும்.

ஒரு கட்டத்தில் வெப்சைட்டில் காண்பிக்கப்படும் பணத்தை எடுக்க முயலும் போது, பல்வேறு கட்டணங்களான withdrawal fee, பிராசசிங் fee, என்று கட்ட சொல்லுவர். பணம் கட்ட தவறும் பட்சத்தில் அக்கவுண்ட் close ஆகிவிடும் என்றும் பயமுறுத்துவர்.திரும்பத் திரும்ப அவர்கள் கேட்கும் பணத்தை கட்டினாலும் கூட ஒருபோதும் பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் வந்து சேராது. சில நாட்களில் வெப்சைட்டை Down செய்துவிட்டு குற்றவாளிகள் மொத்தமாக தடயங்களையும் அழித்து விடுவர்.

(2) வங்கி பெயரில் மோசடி  குற்றம்:
குற்றவாளிகள், சில தனியார் வங்கிகளின் லோகோவினை வாட்சப் DP யாக வைத்துக்கொண்டு அந்த எண்ணில் இருந்து பொதுமக்களுக்கு வங்கி அனுப்புவது போல் மெசேஜ் அனுப்புவர் அதில் வங்கி கணக்கோடு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கவில்லை எனில் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்று குறிப்பிட்டு லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும்.
அந்த லிங்கை கிளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட வங்கியில் முகப்பு பக்கத்தை போன்றே காட்சியளிக்கும். அதில் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு பொதுமக்கள் லாகின் செய்யும்போது, அந்த தரவுகள் சைபர் கிரிமினல்களுக்கு சென்று விடும்.

பொதுமக்களின் வங்கி தொடர்பான தரவுகளை வைத்துக்கொண்டு, அவர்களின் சேவிங் அக்கவுண்டில் உள்ள பணத்தை திருடுவதோடு, வங்கிகளின் வெப்சைட் மற்றும் மொபைல் செயலிகளில் உள்ள இன்ஸ்டன்ட் லோன் வசதியை பயன்படுத்தி பொதுமக்களின் பெயரில் லோன் எடுத்த, கிரெடிட் ஆகும் பணத்தை கிரிமினல்கள் தங்கள் அக்கவுண்டிற்கு உடனடியாக மாற்றி விடுகின்றனர். இதனால் தாங்கள் எடுக்காத லோன் பணத்திற்காக பொதுமக்கள் பாதிக்கப்படுவதும், வங்கிகள் பாதிப்புறுவதும் ஏற்படுகிறது.

எனவே முன்பின் தெரியாத நபர்கள் சொல்வதை நம்பி எந்த வெப்சைட்டிலும் பணத்தை கட்ட வேண்டாம். பான் கார்டு, ஆதார் கார்டுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று வரும் லிங்குகளையோ கிளிக் செய்ய வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : YouTube ,Commissioner of Police ,Shankar Jiwal , Be careful while using the internet, YouTube, bank loan information need caution: Commissioner of Police Shankar Jiwal informs the public
× RELATED யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்