பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: பிற மாநிலத்தைச் சேர்ந்த  தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்யும் அதே நேரத்தில்,  தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை  அளிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருப்பது வருத்தமளிக்கும் செய்தியாகும்.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறானது என்று அரசு தரப்பில் அறிவித்திருப்பது ஆறுதல். தலைசிறந்த பண்புகளைக் கொண்ட தமிழர்கள் மீது அவதூறு பரப்புவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதுபோன்ற வதந்திகள் தமிழ்நாட்டின் தொழில் அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், சட்டம் - ஒழுங்கு சீரழிவிற்கும் வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்யும் அதே நேரத்தில், தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தருணத்தில், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமையென கருதுகிறேன். பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும், அவர்களுடைய பணியை முறைப்படுத்துவதையும், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தமிழக மக்களின் வளர்ச்சியையும், தொழில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு, பிற மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதையும், வதந்திகள் பரப்பியோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதையும் அரசு உறுதி செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: