×

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக. வதந்தி பரப்பியோர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உரிமைகளையும்  உறுதிப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருபுறம் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம், இன்னொரு புறம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரைப் படுகொலை என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. வெளிமாநில தொழிலாளர்கள் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வேலை நேரமும் வரம்பற்றதாக உள்ளது. அவர்கள் கால்நடைகளைப் பட்டியில் அடைத்து வைப்பதுபோல சுகாதாரமற்ற சூழலில் வைத்து வேலை வாங்குகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சட்டப்படி அவர்களுக்குள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.



Tags : Thirumavalavan , Migrant workers issue: Action should be taken against those spreading rumours: Thirumavalavan insists
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்