×

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நாளை பொங்கல் விழா: பக்தர்கள் குவிகின்றனர்

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும். இந்த வருட பொங்கல் திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நாளை (7ம் தேதி) நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். இதன்பின் கோயிலின் 6 கிலோமீட்டருக்கு மேல் சுற்றளவில் குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடத் தொடங்குவார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் பானைகளில் நிவேத்தியம் செய்யப்படும். இதன் பிறகு தங்களது வேண்டுதலை பகவதி அம்மன் நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்குத் திரும்புவார்கள்.

பொங்கலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் திருவனந்தபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம் நகர் முழுதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 4 எஸ்பிக்கள் தலைமையில் 3,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். நேற்று 6 மணிநேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags : Pongal festival ,Bhagwati Amman Temple , Pongal festival tomorrow at riverside Bhagwati Amman temple: Devotees throng
× RELATED பாலக்காடு பகவதி அம்மன் கோயில் பூரம் திருவிழா