×

ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஓய்வறை: டீ, காபி, பிஸ்கெட், குடிநீர் வசதி ஏற்பாடு புத்தகம் படிக்கலாம், விளையாடலாம் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை

சென்னை: தூய்மை பணியாளர்களின் மனஅழுத்தத்தை போக்க ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில், பல்வேறு வசதிகளுடன்  ஓய்வறை ஒன்றை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.சென்னை முழுவதும்  தூய்மையாக இருக்க முக்கிய காரணம் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களின் இரவு பகல் பாராத உழைப்பு தான். சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும், ஒரு நாள் தூய்மை பணியாளர்கள் பணிக்கு வரவில்லை என்றால் சென்னையின் நிலைமை மோசமாக இருக்கும். சென்னையின் ஒவ்வொரு பொழுதும், குறிப்பாக பேரிடர் காலங்களிலும் சென்னை இயல்பாக இயங்க இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதேவேளையில் இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகம். இதனால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

அவர்களின் மன அழுத்தத்தை போக்கி, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உர்பசேர் சுமீத் நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வறையில் அமர்ந்து சாப்பிடும் வசதி, தூய்மையான குடிநீர், இருவேளைகளில் டீ, காபி மற்றும் பிஸ்கெட் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் பொழுதைப் போக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் கேரம், செஸ் விளையாட்டுகள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தூய்மை பணி மேற்கொள்ளும் பத்மா கூறுகையில், ‘‘இங்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. வெயில் நேரங்களில் ஓய்வு எடுக்க வசதியாக உள்ளது. இது போன்ற ஒவ்வொரு பகுதிகளிலும் அமைத்தால் நன்றாக இருக்கும்,’’ என்றார்.  

ஆண்டுக்கு ஒரு முறை சிறந்த பணியாளர்கள்  தேர்தெடுக்கப்பட்டு, அவர் கோவா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு  குடும்பத்துடன் இலவசமாக சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு நேர்த்தியான உடை, பாதுகாப்பு உபகரணங்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என உர்பசேர் சுமீத் நிறுவனத்தை சேர்ந்த ஹரி பாலாஜி  தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Rayappettai Lloyds Colony , Restroom: tea, coffee, biscuits, drinking water facilities provided by the corporation for cleaning workers in Lloyds Colony, Rayapetta, read books, play games, measures to relieve stress
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...