×

இந்தியாவில் நீதித்துறை, ஊடகம் உட்பட ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல்: லண்டனில் ராகுல் பேச்சு

லண்டன்: இந்தியாவில் ஊடகம், நீதித்துறை, நாடாளுமன்றம் உட்பட ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல் நடந்து வருவதாக லண்டனில் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார கால பயணமாக லண்டன் சென்றுள்ளார். அங்கு கடந்த வாரம் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல், ‘இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன’ என குற்றம்சாட்டினார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற ராகுல் பேசியதாவது: இந்தியாவில் ஊடகங்கள், நீதித்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதை இப்போதுதான் பிபிசி கண்டுபிடித்துள்ளளது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக இது இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருவதை அனைவரும் அறிவார்கள். பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள். அரசுக்கு சாதகமான பத்திரிகையாளர்களுக்கு வெகுமதி தரப்படுகிறது. எனவே, அரசுக்கு எதிராக எழுதுவதை பிபிசி நிறுத்தினால், அதன் விவகாரம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். வழக்குகள் மறைந்து விடும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பகுதி செயல்படாத நிலைக்கு தள்ளப்படுவதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற உலகின் பிற ஜனநாயகங்கள் கவனிக்கத் தவறியது வேதனை அளிக்கிறது. இந்தியா மவுனமாக இருக்க வேண்டும் என பாஜ விரும்புகிறது. ஏனென்றால் அவர்கள் இந்தியாவின் வளங்களை தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு தாரைவார்க்க விரும்புகின்றனர். அதற்காக மக்களின் கவனத்தை திசைதிருப்புகின்றனர். எனவே, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜவை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற அடிப்படை யோசனை எதிர்க்கட்சியின் மனதில் ஆழமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

* சீன ஆக்கிரமிப்பு: பிரதமர் மறைப்பு இந்தியா, சீனா உறவு குறித்து ராகுல் பேசுகையில், ‘‘சீனா எங்கள் நாட்டிலிருந்து 2,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை அபகரித்து விட்டது. எங்கள் பிரதேசத்திற்குள் நுழைந்து, எங்கள் வீரர்களை அவர்கள் கொல்கின்றனர். ஆனால், இவற்றை எல்லாம் பிரதமர் மறைக்கிறார். ஒரு அங்குல நிலம் கூட அபகரிக்கப்படவில்லை என்கிறார் பிரதமர். அதுதான் பிரச்னை’’ என்றார்.


Tags : India ,Rahul ,London , Brutal attack on democratic institutions including judiciary, media in India: Rahul's speech in London
× RELATED தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம்...