×

இரானி கோப்பை கிரிக்கெட் இதர இந்தியா சாம்பியன்

குவாலியர்: மத்திய பிரதேச அணியுடனான இரானி கோப்பை போட்டியில், இதர இந்திய அணி 238 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இதர இந்தியா முதல் இன்னிங்சில் 484 ரன் குவித்தது. ஈஸ்வரன் 154, ஜெய்ஸ்வால் 213, யஷ் துல் 55 ரன் விளாசினர். மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 294 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. யஷ் துபே 109, ஹர்ஷ் காவ்லி 54, சரன்ஷ் ஜெயின் 66 ரன் எடுத்தனர். இதையடுத்து, 190 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இதர இந்தியா 246 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஜெய்ஸ்வால் 144 ரன் விளாசினார். இதைத் தொடர்ந்து, 437 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்திருந்தது.

கை வசம் 8 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 356 ரன் தேவை என்ற நிலையில் கேப்டன் ஹிமான்ஷு மந்த்ரி 51 ரன், ஹர்ஷ் காவ்லி 15 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். மந்த்ரி மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். காவ்லி 48, அமன் சோலங்கி 31, அங்கித் குஷ்வா 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.மத்திய பிரதேசம் 2வது இன்னிங்சில் 198 ரன் மட்டுமே சேர்த்து (58.4 ஓவர்) ஆல் அவுட்டானது. இதர இந்தியா பந்துவீச்சில் சவுரவ் குமார் 3, புல்கித் நரங், அதித் ஷேத், முகேஷ் குமார் தலா 2, நவ்தீப் சைனி 1 விக்கெட் எடுத்தனர். 238 ரன் வித்தியாசத்தில் வென்ற இதர இந்தியா, இரானி கோப்பையை முத்தமிட்டது. முதல் இன்னிங்சில் 213, 2வது இன்னிங்சில் 144 ரன் விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.




Tags : Irani Cup ,India , Irani Cup Cricket Other India Champion
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!