வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் அரசு, மாவட்ட நிர்வாகம் செயல்பாடு திருப்தியளிக்கிறது: திருப்பூரில் ஆய்வுக்குபின் பீகார் குழு பாராட்டு

திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என, திருப்பூரில் ஆய்வு செய்த பின்னர் பீகார் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலையில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதால், அவர்களிடம் அச்சம் ஏற்பட்டது. அவை எல்லாம் வதந்தி என அந்தந்த மாவட்டங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டார். இதுபோல் வதந்தி பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிற பனியன் நிறுவனங்களுக்கு சென்று போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்தனர். 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் திருப்பூரில் எந்தவித அச்சமும் இன்றி வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பீகாரில் இருந்து பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இவர்களின் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.

இதில் பீகார் குழுவினர், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, திருப்பூர் எஸ்பி சசாங் சாய், துணை கமிஷனர் அபிஷேக் குப்தா மற்றும் பீகாரை பூர்வீகமா கொண்ட திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார் மற்றும் தொழில்துறையினர், பனியன் நிறுவன உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் அளித்த பேட்டி:  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். பீகார் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். மேலும், பல சங்க நிர்வாகிகளுடன் பேசினோம். கோவையில் நடந்த சம்பவம் உள்பட வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களை திரித்து, தவறான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது.

ஆனால் இதனை போக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. இதற்கு எங்களது பாராட்டுக்களை  தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதன் பின்னர் பீகார் குழுவினர் மற்றும் அதிகாரிகள் அவினாசி ஈட்டிவீரம்பாளையம், கணபதிபாளையம், எம்.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். மேலும், வடமாநில தொழிலாளர்களிடம் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டனர்.

* இந்தியாவில் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் ஜெயின் சங்க தலைவர்

ஈரோடு மாவட்ட ஜெயின் சமூக சங்கத் தலைவர் பிரகாஷ் ஜெயின் நேற்று அளித்த பேட்டி: கடந்த ஒரு வாரமாக வாட்ஸ் அப் குரூப்களில் பீகார் மாநிலத்தவர்கள், ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னையில் தாக்கப்படுவது போல வீடியோ பரவி வந்தது. அதுபோல சம்பவம் எங்கும் நடக்கவில்லை. தமிழ்நாடு முதல்வரும், காவல் துறை தலைவரும் அந்த வீடியோ உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழர்களுக்கும், பீகார் மாநிலத்தவர்களுக்கும் இங்கு எந்த பிரச்னையும் இல்லை. மகாராஷ்டிரா, அசாம் போன்ற மாநிலங்களில்தான் பீகார் மாநிலத்தவர்களுக்கு நிறைய பிரச்னை நடக்கும். நான் ஈரோட்டில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஈரோட்டில் ஜெயின் சமூக மக்கள் 3 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். தமிழக மக்கள் மரியாதையுடன் நடந்து கொள்பவர்கள். எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் எதுவென்றால் அது தமிழ்நாடுதான் என்றார்.

* பாதுகாப்பாக இருப்பதாக குடும்பத்தினருக்கு  வீடியோ வெளியிட்ட வடமாநிலத்தினர்

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தற்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வீடியோ பதிவிட்டு குடும்பத்தினருக்கு அனுப்பி வருகிறார்கள். மேலும், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகளையும் அவர்கள் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.

* அமைச்சர்கள் பேட்டி

வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அளித்த பேட்டியில், வடமாநில அதிகாரிகள் இங்கு உள்ள தொழிலாளர்களிடம் ஆய்வு செய்தனர். ஆய்வை தொடர்ந்து தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி உள்ளனர். இது மதம் சார்ந்த பிரச்னை இல்லை. வட மாநில தொழிலாளர்கள் வாழ்க்கைக்காக வந்துள்ளனர். இங்குள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்றார்.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறுகையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனர். சிலர் குட்டையை குழப்பி குளிர் காய நினைக்கின்றனர். அது நடக்காது. தமிழகத்தில் முழு பாதுகாப்போடு வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். பழைய சம்பவங்களை வலைதளங்களில் ஒளிபரப்பி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். அது நடக்கவில்லை. நடப்பதற்கான வழியும் இல்லை. இது போன்ற நபர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என்றார்.

Related Stories: