×

விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஏன்? 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஒன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு குற்றச்சாட்டுடன் கூடிய கடிதத்தை எழுதி அனுப்பி வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் ஆளும் பாஜவின் கைப்பாவையாக இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேப்போன்று பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமித்து அம்மாநில அரசுகளுக்கு பெரும் நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து ஒன்பது தேசிய கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதத்தை நேற்று எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.

அதில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்(பி.ஆர்.எஸ்), மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி(திரிணாமுல் காங்கிரஸ்), டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்(ஆம்ஆத்மி), பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்(ஆம்ஆத்மி) மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்(ராஷ்டிரிய ஜனதாதளம்), சரத்பவார்( தேசியவாத காங்கிரஸ்), பரூக் அப்துல்லா(தேசிய மாநாடு) ,  உத்தவ் தாக்கரே(சிவசேனா-உத்தவ் அணி), அகிலேஷ் யாதவ்(சமாஜ்வாடி) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கடிதத்தில், ’இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.  

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒன்றிய அமைப்புகள் அப்பட்டமாக பயன்படுத்தப்படுவது நாம் ஜனநாயகத்தில் இருந்து ஏதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக கடந்த பிப்ரவரி 26ம் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முறைகேடு செய்ததாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இது மக்களை கொதிப்படைய செய்துள்ளது.  டெல்லியின் பள்ளிக் கல்வியை மாற்றியமைத்ததற்காக மனிஷ் சிசோடியா உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர்.  அவரது கைது உலகெங்கிலும் அரசியல் பழிவாங்கலுக்கு உதாரணமாகவே குறிப்பிடப்படப்படுகிறது. இதனால் இந்திய ஜனநாயகத்தையே பாஜ  அச்சுறுத்துகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

குறிப்பாக கடந்த 2014 முதல்  ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட, கைது செய்யப்பட்ட, சோதனை அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முக்கிய அரசியல்வாதிகளின் மொத்த எண்ணிக்கையில், அதிகம்பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள். உதாரணமாக, முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், தற்போதைய அசாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, சாரதா சிட் ஃபண்ட் ஊழல் தொடர்பாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார்.  

ஆனால், அவர் பாஜவில் இணைந்த பிறகு அந்த வழக்கில் முன்னேற்றம் அடையவில்லை.  இதேபோல், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த  சுவேந்து அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகியோர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையின் கீழ் இருந்தனர். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் பாஜவில் இணைந்த பிறகு வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.   தவிர்த்து விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஏன் என்பது  புரியவில்லை. இதேப்போன்று  இந்திய ஜனநாயகத்தில் ஆளுநர்களின் பங்கு என்ன என்று இந்திய மக்கள் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

கவர்னர்  அலுவலகங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசு நிர்வாகத்தில் கவர்னர்கள் தலையிடுகின்றனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கவர்னர்கள் அரசியலமைப்பு விதிகளை மீறுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பது மட்டுமில்லாமல் நமது ஜனநாயகத்திற்கும் நல்லது கிடையாது. ஜனநாயக நாட்டில் மக்களின் விருப்பமே உயர்ந்தது என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : PM Modi , Why are investigation systems misused? 9 Opposition Leaders Letter to PM Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!