இந்திய நீதித்துறை, ஜனநாயகம் குறித்து நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது: ஒன்றிய சட்ட அமைச்சர் கருத்து

புதுடெல்லி: இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக உலகிற்கு தவறாக சொல்ல முயற்சிகள் நடப்பதாக ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய வழக்குரைஞர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக சிலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தவறான தகவல்களையும் சொல்ல முயற்சி செய்கிறார்கள். நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது.

இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்பது தெளிவு. அமெரிக்காவை மிகப் பழமையான ஜனநாயக நாடு என்று கூறலாம். ஆனால் இந்தியா தான் ஜனநாயகத்தின் தாய். இந்திய நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது சிலருக்குத் தெரியாததால், சமூக ஊடகங்களில் நீதிபதிகள் குறித்து தவறான கருத்துகளை பதிவிடுகின்றனர். இதுபோன்ற செயல்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நீதித்துறையை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது என்பது நல்ல அறிகுறி அல்ல. பொதுமக்களின் விமர்சனங்களிலிருந்து நீதித்துறை விலகி இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியின் அடையாளத்தை தக்கவைப்பதற்காக நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் சிலரிடம் பிரச்சினை உள்ளது. இந்திய நீதித்துறை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ளாது. நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் 65 தேவையற்ற சட்டங்களை ரத்து செய்ய முன்மொழிந்துள்ளோம். இதுவரை 1,486 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவை பாதுகாப்பானதாக மாற்ற ஒன்றிய அரசு விரும்புகிறது; எனவே கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறினார்.

Related Stories: