×

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி எதிரொலி கூடங்குளத்தில் தொழிலாளர்களுடன் நெல்லை எஸ்பி சந்திப்பு: யாரும் அச்சப்பட தேவையில்லை என விழிப்புணர்வு

ராதாபுரம்: வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி எதிரொலியாக கூடங்குளத்தில் வடமாநில தொழிலாளர்களை நெல்லை எஸ்பி சரவணன் சந்தித்து பேசினார். அப்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ உண்மைக்கு புறம்பானவை. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரவி வருகிறது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் பலர் அச்சத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார். அதேபோல் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். மேலும் அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன், நேற்று கூடங்குளம் வருகை தந்தார். அப்போது அவர், கூடங்குளம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் பணிபுரியும் இடம் மற்றும் தங்கியுள்ள இடங்களுக்கு சென்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக விஷமிகளால் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு பற்றி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதனைக் கண்டு யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலம். அனைவரையும் சகோதரர்களாகத் தான் பார்க்கிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள், முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

அதைக் கண்டு உங்களது குடும்பத்தாரோ, நீங்களோ அச்சப்பட தேவையில்லை. உங்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் என்ன உதவிகள் தேவை என்றாலும் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருவோம். உங்களுக்காக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உறுதுணையாக எப்போதும் இருக்கும்’ என்றார். நிகழ்ச்சியில் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், குற்றப் புலனாய்வுப் பிரிவு லிங்கசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Nellie SP ,Kudangulam , Nellie SP meets with workers in Kudankulam amid rumors of attacks on northerners: Awareness that no one needs to be afraid
× RELATED கூடங்குளம் கடலில் கரை தட்டிய மிதவை...