×

தஞ்சாவூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு 652 காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்: மாடு முட்டியதில் 26 பேர் படுகாயம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 652 காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டி அடக்கினர். இதில் மாடுமுட்டியதில் 26 பேர் படுகாயம் அடைந்தனர். தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா நேற்று நடந்தது. விழாவை தஞ்சாவூர் ஆர்டிஓ ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி வீரர்களும் ஏற்றுக்கொண்டனர். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 613 காளைகள் மற்றும் உள்ளூரில் இருந்து வந்திருந்த 39 காளைகள் உள்பட 652 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டன.

காளைகளைப் பிடிக்க மொத்தம் 375 போ் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் 4 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்பட்டனா். மாடு பிடி வீரா்களைச் சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் உடல் நலம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு தகுதியானவா்கள் மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனா். இதேபோல, மாடுகளை கால்நடைப் பராமரிப்புத் துறையினா் பரிசோதனை செய்தனா். தொடர்ந்து நடந்த ஜல்லிக்கட்டில் 16 மாடுபிடி உரிமையாளர்கள், 9 மாடு பிடி வீரர்கள் மற்றும் ஒரு பார்வையாளர் என மொத்தம் 26 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் வல்லம் டி.எஸ்.பி., நித்யா தலைமையில் 300க்கும் அதிகமான போலீசார் மேற்கொண்டனர். இதில் தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, சில்வா் பாத்திரம், குத்துவிளக்கு, மின் விசிறி, கட்டில், நாற்காலி போன்ற பல பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் பிடிபடாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டன.

Tags : Jallikattu ,Thanjavur , Jallikattu held near Thanjavur: 652 bulls wrestle: 26 injured in cow stampede
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...