×

கடந்த 20 மாதங்களில் 561 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன: மண்டைக்காடு, பகவதியம்மன் திருக்கோயில் கொடியேற்ற விழாவில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

கன்னியாகுமரி: இந்து சமய அறிநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு, அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் இன்று (05.03.2023) நடைபெற்ற மாசி கொடை விழாவின்  கொடியேற்றும் நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு, அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா புகழ்பெற்றதாகும். இவ்விழாவிற்கு தமிழகம் மற்றுமின்றி, கேரள மாநிலத்திலிருந்தும் பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வந்து அருள்மிகு பகவதியம்மனை வழிபாடு செய்து வருகின்றனர். இந்த ஆண்டிற்கான மாசி கொடை விழாவின்  முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள்  திருவிழா நடைபெறுகின்றது. விழா நாட்களில் தினமும் பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாட்டு பூஜைகளும், சமய சொற்பொழிவு, சமய இன்னிசை விருந்து போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இன்று நடைபெற்ற மாசி கொடை விழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மண்டைக்காடு, அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன்  சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் மண்டைக்காடு, பகவதியம்மனின் அருளை பெருகின்ற சூழ்நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். மாவட்ட அறங்காவலர் குழுக்களை பொறுத்தளவில் தமிழ்நாட்டிலுள்ள 38 வருவாய் மாவட்டங்களுக்கும் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட அறங்காவலர் குழுக்களை நியமிக்க வேண்டும்.  

அந்த  வகையில் இதுவரை 30 மாவட்டங்களுக்கு மாவட்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அந்தந்த வருவாய் மாவட்டத்தில் இருக்கின்ற சட்டப்பிரிவுகள் 46(1), 46(2), 49(1) உட்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்கின்ற பணியை மேற்கொள்ள உள்ளனர். சட்டப்பிரிவு 46(3) -ன் கீழ் பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற திருக்கோயில்கள் மற்றும் ஸ்கீம் கோயில்கள் உள்ளிட்ட 501 திருக்கோயில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறங்காவலர்கள் நியமிக்கின்ற பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டுள்ளார்கள்.

 தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 20 மாதங்களில் 561 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 2,400 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2500 கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி நிதியுதவியை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள  100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 100 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.15 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் 78 திருக்கோயில்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 22 திருக்கோயில்களுக்கும் நிர்வாக அனுமதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடியே 8 இலட்சம்  மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள் விரைந்து முடித்து கலசாபிசேகம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், வட்டாட்சியர் கண்ணன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Thirukoils ,Minister ,Sekarbabu ,Bhagavathyamman Tirukhoil ,Mandalayam ,Bhagathyamman , Among the 561 temples are Kudamuzku, Mandaikkadu, Bhagavatiyamman Temple, Minister Shekhar Babu.
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...