×

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி: எம்டிசி விரைவில் புதிய திட்டம்

சென்னை: சென்னையில் பேருந்துகளை தனியார் இயக்கும் வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 29.50 லட்சம் மக்கள் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Gross Cost Contract முறையில் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025-ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் தற்போது பேருந்துகளை இயக்கி வரும் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

இந்த பேருந்துகளுக்கு கி.மீ இவ்வளவு ரூபாய் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினாரிடம் கேட்டபோது, மும்பை போன்ற மாநிலங்களில் இது போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தோல்வி அடைந்துள்ளது.

தற்போது சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் தங்களின் பேருந்துகளை மாநகரில் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதற்கு ஒரு கி.மீட்டருக்கு இவ்வளவு ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். இந்த தனியார் நிறுவனங்கள் தினசரி வசூல் ஆகும் தொகையை மாநகர் போக்குவரத்து கழகத்திடம் அளிக்க வேண்டும்.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக வரும் தொகையை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்துக் கொள்ளும். குறைவான தொகை வந்தால் கூடுதல் தொகையை மாநகர் போக்குவரத்து கழகம் போட்டு அந்த தனியார் நிறுவனத்திற்கு அளிக்கும்.

இவ்வாறு செய்தால் வரும் காலத்தில் தனியார் பேருந்துகள் இயக்கும் வழித்தடத்தில் அரசு பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

Tags : Chennai ,MTC , Allowing Privates to Run Buses in Chennai: MTC New Scheme Soon
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...