×

திருவாரூரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3 கோடியில் 3 குளங்கள் சீரமைக்கும் பணி மும்முரம்

திருவாரூர்: திருவாரூர் நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் 3 குளங்கள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநில முழுவதும் இந்த கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மாணவர்கள் தங்களது அறிவு திறனை வளர்த்துகொள்ளும் வகையில் இந்த கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தெற்கு வீதியில் ரூ. ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் ஒன்று அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த அறிவுசார் மையமானது ஆயிரத்து 150 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்படுகிறது. இதில் ஆண், பெண் இருபாலருக்கும் தனிதனியாக புத்தக வாசிப்பு அறைகள் மற்றும் பள்ளி, குழந்தைகளுக்கான வாசிப்பு அறைகள், கணினி அறை, கூட்டரங்கு ஆகியவை மட்டுமின்றி கழிவறை வசதியுடனும் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் நகராட்சியின் சோமசுந்தரம் பூங்காவானது தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சிக்காக 4 புறமும் நடைமேடைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நகரில் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் பிடாரி கோவில் தெருவில் இருந்து வரும் குளமானது ரூ. ஒரு கோடியே 9 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த குளமானது தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் நடைபாதைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் மின்விளக்கு வசதியுடன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதே போன்று வாசன் நகர் குளமானது ரூ. 73 லட்சம் மதிப்பில் மதிப்பிலும் மற்றும் ஐ.பிகோயில் குளமானது ரூ ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பிலும் தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் நடை பாதைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் மற்றும் மின்விளக்குகள் அமைப்பதற்கான பணிகள் என மொத்தம் 3 குளங்களும் ரூ. 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பொது மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags : Thiruvarur , In Tiruvarur, the work of renovating 3 ponds at a cost of Rs 3 crore is in full swing in Kalayan Urban Development Project
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...