×

191வது அவதார தின விழாவையொட்டி அய்யா வைகுண்டர் பவனி

நெல்லை: பாளை  வடபகுதி அய்யா வைகுண்ட சுவாமி தத்துவ தவ தர்மபதியில் அய்யா வைகுண்டரின்  191வது அவதார தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல்  பால் பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி மற்றும் அன்புகொடி மக்கள்  காவிக்கொடியேந்தி முக்கிய இடங்கள் வழியாக ஊர்வலமாக வரும் வைபவம் நடந்தது. அப்போது  உழைக்கும் கரங்கள் கட்டுமான நல சங்கத்தினர் செயலாளர் சின்னத்துரை,  துணைத்தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் பக்தர்களுக்கு  பிஸ்கட், பால் வழங்கினர். தொடர்ந்து காலை 9 மணிக்கு அன்னதர்மம், பகல் 12  மணிக்கு உச்சிப்படிப்பு பணிவிடை, பகல் 1.30 மணிக்கு சிறப்பு அன்னதர்மம்  ஆகியவை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.  தொடர்ந்து  மாலை சிறப்பு உகப்பெருக்கு பணிவிடை, இரவு  அய்யா காளை  வாகனத்தில் பவனி,  அன்னதர்மம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து இரவு பக்தியிலும்  பண்பாட்டிலும் மனிதன் சிறந்து விளங்குவது அந்தக்காலமா? இந்த காலமா? என்ற  தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை அய்யாவின் பணிவிடையாளர்கள் தர்ம  வழிபாடு குழுவினர் செய்தனர்.
 
இதேபோல் அம்பை அருகே வாகைகுளம் வாகைபதி அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு வாகைபதி அய்யாவழி பக்தர்கள் மற்றும் அன்பு கொடி மக்கள் சார்பில் மாசி மகா ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை அம்பை கிருஷ்ணன் கோயிலில் இருந்து ஏஎஸ்பி பல்வீர் சிங் துவக்கிவைத்தார். வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி முன் நின்று முறை நடத்தி மேற்கு நோக்கி வாகைபதி சென்றது.

இதில் அகஸ்தியர்பட்டி, தெற்கு பாப்பான்குளம், பாபநாசம், ஊர்க்காடு, அயன்சிங்கம்பட்டி, முக்கூடல், விகேபுரம், அம்பை, வைராவிகுளம், அடைச்சாணி, ஆழ்வார்குறிச்சி, அடையக்கருங்குளம் உள்ளிட்ட 32 அய்யா வழி பதிகளில் இருந்தும் பல்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். சிறுவர், சிறுமிகளின் ஆட்டம் பாட்டம் கோலாட்டம், இளைஞர்களின் செண்டை மேளம் முழங்க அய்யா அரோகரா கோ‌ஷத்துடன் ஊர்வலம் நடந்தது.

இதையொட்டி அம்பை- பாபநாசம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மாசி மகா ஊர்வலம் அம்பை மெயின் ரோடு வழியாக வாகைபதியை வந்தடைந்ததும் சிறப்பு பணிவிடையும், அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதர்மமும் நடந்தது. ஏற்பாடுகளை வாகைகுளம் வாகைபதி அய்யா வழி பக்தர்கள், அம்ைப மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர். இதையொட்டி போது அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Ayya Vaikunder Bhavani ,191st Incarnation Day , Ayya Vaikunder Bhavani on the occasion of 191st Incarnation Day
× RELATED 191வது அவதார தின விழாவையொட்டி அய்யா வைகுண்டர் பவனி