×

பட்டினச்சேரி கடற்கரையில் புதைக்கப்பட்ட குழாய் மீண்டும் உடைப்பால் கடலுக்குள் பாயும் குருடாயில்: மீனவர்கள் போராட்டத்தால் பதற்றம்

நாகப்பட்டினம்: நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடற்கரையில் புதைக்கப்பட்ட குழாய் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குருடாயில் வெளியேறியதால் பட்டினச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி வரையிலான மீனவ கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் பொது துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் குழாய் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இதற்காக கடந்த 20 ஆண்டு காலத்திற்கு முன்பு கடற்கரையை ஒட்டி பூமிக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட குழாய் கடல் சீற்றம் காரணமாக கடல் நீரில் மூழ்கியது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குருடாயில் வெளியேற தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடல் நீரில் குருடாயில் படர்ந்து கடல் நீர் முற்றிலுமாக நிறம் மாறியது.
இதையடுத்து இந்திய கடலோர காவல் படை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் கடல் நீரில் படர்ந்துள்ள எண்ணெய் வீரியத் தன்மையை குறைக்க இந்திய கடலோர காவல் படையினர் கெமிக்கல் கலந்த திரவத்தை கடல் நீரில் கரைத்தனர். சிபிசிஎல் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து அதை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் குழாய் உடைப்பை சீர் செய்ய முடியாமல் காத்திருந்தனர். கடல் நீர் மேலும் அதிகரிக்காமல் இருக்க மணல் மூட்டைகளை எடுத்து வந்து அடுக்கி வைத்தனர். எண்ணெய் படர்ந்துள்ள பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் (3ம் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு மேல் கடல் சீற்றம் குறைந்த காரணத்தால் கடல் நீர் சற்று உள் வாங்கியது. இதைதொடர்ந்து மூன்று பொக்லைன் இயந்திரங்கள், எண்ணெய் உறிஞ்சும் நவீன இயந்திரம் ஆகியவற்றை கொண்டு வந்து சிபிசிஎல் அதிகாரிகள் குழாய் அடைப்பை சீர் செய்தனர். இதற்கிடையே இரவோடு இரவாக தஞ்சை சரக டிஜஜி ஜெயச்சந்திரன் தலைமையில் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் போலீசார் குவிக்கபட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் முக்கிய சாலைகள், முக்கியமான அரசு அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையே நேற்று (4ம் தேதி) காலை பட்டினச்சேரி மீனவ கிராம பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 சென்னையில் இருந்து சிபிசிஎல் அதிகாரிகளும் நாகூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். எனவே அவர்கள் முன்னிலையில் மீனவ பஞ்சாயத்தார்களை கொண்டு நாகப்பட்டினம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பொழுது பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் இணைந்து நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள குழாய் முற்றிலும் அகற்ற வேண்டும். தற்காலிக நடவடிக்கை எடுப்பதால் எவ்வித பலனும் அளிக்காது. எனவே குழாய் அகற்றும் வரை பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம் என உறுதியளித்தனர்.

Tags : Pattinacherry beach ,Kurudail , Buried pipeline on Pattinacherry beach bursts again, Kurudail flows into sea: Fishermen protest tension
× RELATED பட்டினச்சேரியில் குருடாயில் கடலில்...