தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர், நட்பானவர்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளர். புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் வெளியாகி வந்தன. இது போன்று போலி வீடியோக்களால் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளிவரும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை எனவும் அந்த வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

Related Stories: