×

முக்கல்நாயக்கன்பட்டியில் மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 18 வீரர்கள் காயம்

தர்மபுரி: தர்மபுரி முக்கல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் 19 காளைகள் பங்கேற்றன. இதில் காளைகள் முட்டியதில் 18 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.
தர்மபுரி முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில், பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 19 காளைகள் பங்கேற்றன. தஞ்சை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் போன்ற இடங்களிருந்து 45 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு மாட்டை பிடிக்க 9 பேர் என்ற வீதத்தில், காளையை பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. வடத்தில் கட்டிய காளையை பிடிக்க 20 நிமிடம்  ஒதுக்கப்பட்டது.

மாலை 4.30 மணிக்கு மஞ்சுவிரட்டு முடிந்தது. போட்டியில் காளைகள் முட்டியதில் 18 வீரர்கள் காயம் அடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், மாலையில் 16 பேர் வீடு திரும்பினர். 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் தலா ஒரு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.  இந்திய விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ்கே மிட்டல் கலந்து கொண்டு, மஞ்சுவிரட்டு போட்டியை பார்வையிட்டார்.

மஞ்சுவிரட்டு போட்டியை, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி தொடங்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், கால்நடை மருத்துவ இணை இயக்குனர்கள் சுவாமிநாதன், இளங்கோ மற்றும் முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சுமதி காளியப்பன், திமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊர் கவுண்டர் சரவணன், பிரமுகர்கள் குணசேகரன், காமராஜ், முனுசாமி, அன்பழகன் மற்றும் அதிகாரிகள், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ரசித்தனர்.

விழாவையொட்டி தர்மபுரி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 180 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மஞ்சு விரட்டு காளைகள் அனைத்தும் மருத்துவம் மற்றும் உடல்நிலை குறித்த பரிசோதனை மேற்கொண்ட பிறகு அனுமதிக்கப்பட்டது. மேலும், மாடுபிடி வீரர்கள் உடல்நலம் குறித்த பரிசோதனைகள் மேற்கொண்டு, தகுதியான நபர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்,’ என்றனர்.


Tags : Bulls ,Manju Vrit ,Mukkalnayakanpatti , Bulls rampage in Manju Vrit at Mukkalnayakanpatti: 18 players injured
× RELATED கொன்னைபட்டியில் ஜல்லிக்கட்டு; 800...