×

ஒருநாள் சிறப்பு சோதனை 447 குற்றவாளிகளிடம் சோதனை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் குற்றங்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில்  447 குற்றவாளிகளிடம்  சோதனை நடத்தியதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  உத்தரவின்பேரில், சென்னையில் குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறப்பு சோதனைகள் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    
இதன்படி,  சங்கிலி, செல்போன் பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருடும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு சோதனைக்கு உத்தரவிட்டதன்பேரில், நேற்று முன்தினம் கூடுதல் காவல் ஆணையர்கள் ஆலோசனையின்படி, இணை ஆணையர்கள் அறிவுரையின்பேரில், துணை ஆணையர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் ஒரு நாள் சிறப்பு சோதனை செய்தனர். இதில், சங்கிலி, செல்போன் பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருடுதல் போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 447 குற்றவாளிகள் நேரில் சென்று சோதனை செய்யப்பட்டு, குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுத்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த வழக்குகளில் தொடர்புடைய 514 குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம்  ஒரே நாளில் 52 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம்  பெற்றும், 52 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெகுநாட்களாக தலைமறைவாக இருந்த 21 குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டறிந்து விசாரணை செய்யப்பட்டது.

பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக, காவல் ஆணையர்  பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதால், குற்ற பின்னணி நபர்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல்  தடுக்கப்பட்டு வருவதுடன், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Minister ,Guilty Shankar Jiwal , One-day special raid 447 criminals: Police Commissioner Shankar Jiwal informs
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...