×

வடமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு கூட்டம்

அம்பத்தூர்: வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களிலும், வடமாநில ஊடகங்களிலும் வதந்தி பரவி வந்தது. இந்நிலையில், நேற்று ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பாடி அருகே உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போலீசார் தரப்பில் சிறப்புக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் வடமாநிலத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ``வட இந்திய மாநிலத்தை சேர்ந்தவர்கள் கவலைப்பட வேண்டாம், எந்த புரளியையும் நம்ப வேண்டாம், தமிழ்நாடு காவல்துறை உங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்” என்ற தலைப்பில் தமிழ் மற்றும் இந்தியில் வடிவமைத்த பதாகைகளை ஏந்தி வடமாநில தொழிலாளர்களுக்கு கொரட்டூர் போலீசார் நம்பிக்கை ஊட்டினர். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் அவர்களுக்கு காவல்துறை சார்பில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் கைகோர்த்தபடி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருவொற்றியூர்: மாதவரம் ஜிஎன்டி சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு மாதவரம் காவல்நிலையம் சார்பில் தேசிய பாதுகாப்பு விழா நேற்று நடந்தது. காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.

உதவி ஆய்வாளர்கள் சிவசங்கரன், ரவிச்சந்திரன் மற்றும் தலைமைக் காவலர் மனோகரன் ஆகியோர் வட மாநில ஊழியர்களிடம், சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, தமிழக அரசும், தமிழக காவல்துறையும் உங்களது. பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உறுதுணையாக இருக்கும் என்றனர். பின்னர் அனைத்து ஊழியர்களுக்கும் காவல் நிலையம், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட  வெளி மாநிலத்தவர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags : North State , Special meeting for North State workers
× RELATED வடமாநில வாலிபர் மாயம்