×

வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு சிறைத்துறைக்கு 700 புத்தகங்கள் நன்கொடை

சென்னை: வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பில், சமூகநலன் சார்ந்த பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறைவாசிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகங்களை நன்கொடையாக வழங்க வி.ஐ.டி நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விசுவநாதன், துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் வழிகாட்டுதலின்பேரில், வி.ஐ.டி சென்னை வளாகத்தில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் இருந்து புத்தகங்களை நன்கொடையாக பெற திட்டமிடப்பட்டது. இதனால் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆர்வமாக புத்தகங்களை வழங்க முன்வந்தனர்.

இதை தொடர்ந்து, விஐடி பல்கலை சென்னை வளாகத்தில் புத்தகங்களை சிறைத்துறைக்கு நன்கொடையாக வழங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், வி.ஐ.டி துணை தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோர் 700 புத்தகங்களை சிறைத்துறை டிஐஜி முருகேசனிடம் வழங்கினர். இதில், நாவல்கள், தமிழ் மொழி வரலாறு, திறன் மேலாண்மை, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

மாணவர்கள் மத்தியில் டிஐஜி முருகேசன் பேசும்போது, புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதால் சிறைவாசிகளுக்கு ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்தார். உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் பேசுகையில், சிறைவாசிகள் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு, வி.ஐ.டி பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். நிகழ்வில், வி.ஐ.டி பல்கலைக்கழக சென்னை வளாகத்தின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu Prison Department ,VIT University , 700 books donated to Tamil Nadu Prison Department on behalf of VIT University
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்