×

தண்ணீர், பள்ளம் என எது இருந்தாலும் இனி யாருடைய உதவியும் வேண்டாம்: மாற்றுத்திறனாளிகளுக்கு (5-இன்-1) நவீன ஊன்றுகோல்: செய்யாறு அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு பெருமை கண்ட பள்ளியில், 1,200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 10ம் வகுப்பை சேர்ந்த ஆங்கில பிரிவில் பயிலும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஆர்.விஷ்ணுபிரசாத், ஏ.அமிர்தபிரியன், ஏ.உமர்பாரூக், எஸ்.ரூபேஷ் கண்ணா, வி.விஷால் ஆகியோர் ஒன்றிணைந்து பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கான நவீன ஊன்றுகோல் (5-இன்-1) கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஊன்று கோலை வடிவமைத்த பள்ளி மாணவர்கள் கூறும்போது, ‘பள்ளியில் நடைபெற்ற கண்பார்வையற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் என்சிசி மாணவர்களாகிய நாங்கள் உதவி செய்வதற்காக சென்றிருந்தோம். அப்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் கையில் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்துகொண்டிருந்தார்.

சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் தடுமாறி விழுந்து விட்டார். உடனே கீழே விழுந்த பார்வையற்ற முதியவரை மீட்டு அவரை அனுப்பி வைத்தோம். இருப்பினும் இச்சம்பவம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்லும் பொழுது வேறொரு நபரின் உதவி நாட வேண்டியுள்ளது என்பதை நினைத்து வருந்தினோம். அது மட்டுமல்லாமல் யாரையும் எதிர்பார்க்காமல் தாமாகவே சென்று வரும் வகையில் பாதுகாப்பாக உணரும் வகையில், எதிர் வரும் ஆபத்துக்களை உணர்த்தும் நோக்கிலும் நவீன ஊன்று கோலை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் தோன்றியது. அதன் அடிப்படையில் நாங்கள் 5 பேரும் ஒரே குழுவாக இணைந்து எங்களது பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் சி.செல்வகணபதி, உஷாராணி ஆகியோரிடம் நவீன ஊன்றுகோல் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எங்களது விருப்பத்தினை தெரிவித்தோம்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு நாங்கள் புதிய நவீன ஊன்றுகோலை (5ன்1) கண்டுபிடித்தோம். இதில் 5 விதமான நவீன வசதிகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். முதலாவதாக சாலையில் நடந்து செல்லும் போது தண்ணீர் தேங்கும் இடங்களில் நவீன ஊன்றுகோல் குறிப்பிட்ட தூரத்திற்குள் உடனடியாக தண்ணீர் இருப்பதற்கான தகவலை ஹெட் போனில் ஒலிபெருக்கி மூலம் (வாட்டர், வாட்டர்) என அறிவிக்கும். இதேபோல் டிரைனேஜ் (கால்வாய்) பள்ளம் வழியில் இருந்தால் ஊன்றுகோலில் உள்ள இரண்டாவது நவீன சென்சார்( டிரைனேஜ், டிரைனேஜ்) என்று அறிவிக்கும். குழந்தைகள், வீட்டு விலங்குகள் தெருவில் குறுக்கிடும் போது மூன்றாவது சென்சார் மூலம் ( பேபி,பேபி) என்று அறிவுறுத்தும், இதேபோல் அருகில் வரும் மனிதர்களையும், விலங்குகளையும், வாகனங்களையும் கண்பார்வையற்றோரின் கண்ணாடியில் வைக்கப்பட்டுள்ள நான்காவது சென்சார் மூலம் உணர்த்த (ஹியூமன், ஹியூமன்) என்று அறிவிக்கும்.

மேலும் நவீன ஊன்றுகோலில் பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளிப்புறத்தில் ஒரு ஸ்பீக்கரும் பொருத்தி ஒலிக்க செய்துள்ளோம். இதனால் அவருடன் பயணிக்கும் சக மனிதர்கள் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் ஆபத்தினை உணர்ந்து உடனடியாக உதவிட முன்வருவார்கள். இவைகள் அனைத்தும் செயல்பட சார்ஜ் ஏற்றிய பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் கொண்ட ஒரே கருவியாக நவீன ஊன்றுகோலில் 5ன்1 ஊன்றுகோலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி ஆசிரியர் செல்வகணபதி உதவியுடன் இக்கருவி ஒரே வாரத்தில் வடிவமைக்கப்பட்டு செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டது. ஊன்றுகோல் சுமார் 500 கிராம் எடை கொண்டுள்ளது.

ஊன்று கோலை தயாரிப்பதற்கான அனைத்து பொருள்களின் செலவுகளையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. ஊன்றுகோலை தயாரிக்க ரூ.2,000 செலவாகி உள்ளது. மேலும் நாங்கள் தயாரித்த ஊன்று கோலில் எதிர்காலத்தில் நவீன ஜிபிஎஸ் கருவி பொருத்துதல், நேரத்தை அறிவிக்கும் கருவி அமைத்து, பேட்டரி சார்ஜர் லெவலை குரலில் ஒலிக்கும் கருவி இவை அனைத்தும் ஒரே கருவியாக செயல்பட அனலாக் கேமரா மூலம் (செயற்கை நுண்ணறிவு கேமரா) பொருத்திடவும், மேலும் இரண்டு பயன்பாடுகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தி (10ன்1) அதிநவீன கருவியாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னை, தனியார் பொறியியல் கல்லூரியில் 450க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றனர். இதில் செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளுக்கான புதுமை படைப்பாற்றல் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, ஊக்கப்பரிசாக ரூ.10,000க்கான காசோலை, சான்றிதழ், மெடல்கள், பள்ளிக்கான நினைவுப்பரிசு பெற்று சாதனை படைத்து அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக பொறுப்பேற்று வழிநடத்திய அறிவியல் ஆசிரியர் சி.செல்வகணபதி மற்றும் மாணவர்கள் விஷ்ணு பிரசாத், அமிர்த பிரியன், உமர் பாரூக், ரூபேஷ்கண்ணா, விஷால் ஆகியோர்களை பள்ளி தலைமையாசிரியர் ஜி ஜெயகாந்தன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.அசோக், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அக்ரி தனசேகரன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் பாபு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

* பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, யுனிசெப் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் திட்டம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மதுரையில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் புதிய சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளாக மாற்றி அவற்றை வர்த்தக ரீதியில் தயாரிக்க உறுதுணைபுரிந்து, மாணவர்களை தொழில் வித்தகர்களாக்க உறுதி பூண்டுள்ளது. 9-12 வகுப்பு மாணவர்கள் பயிலும் 1,560 பள்ளிகள் 1,56,000 மாணவர்கள் 3,120 வழிகாட்டி ஆசிரியர்கள் தமிழ்நாடு அளவில் 40 சிறந்த மாணவர் குழுக்களின் கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து அவற்றில் மிகச்சிறந்த 10 வெற்றி படைப்புகளுக்கு தலா ரூ.1லட்சமும், மற்ற 30 மாணவர் குழுக்களுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் திட்டமாகும்.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 சிறந்த சிந்தனைகளுக்கான தேர்வில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் 6 புதிய சிந்தனைகளை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்தனர். அவற்றில் தேர்வுக்குழுவினர்களின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகுழுவின் இறுதி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 புதிய சிந்தனைகளில் 2 புதிய சிந்தனைகளை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களது படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது.

இவ்வாறு மாவட்டம் தோறும் தேர்வான 10 சிறந்த மாணவர் படைப்புகளை மண்டல அளவிலான புத்தாக்க மேம்பாட்டு முகாம் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் குடியாத்தம் ராஜகோபால் தொழிற்பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது. திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து தலா 10 மாணவர் குழுக்கள் வீதம் 40 குழுக்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமில் யுனிசெப் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கருத்தாளர்கள், வழிகாட்டுனர்கள், நடுவர்கள், அறிவியல்
அறிஞர்கள் மாணவர்களுக்கு மேலும் படைப்புகளை மேம்படுத்திட கருத்துக்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி மாணவர்களை உற்சாகமூட்டி, ஊக்கப்படுத்தினர்.

Tags : Cheyyar Govt School , No more help from water, ditches: Modern crutches (5-in-1) for differently-ableds: Cheyyar Govt School students are amazing
× RELATED தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப...