×

ஐநா.வில் பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு சிறுபான்மையினருக்கு சுதந்திரம் இல்லை

ஜெனீவா: ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர் பேசும்போது, ‘‘காஷ்மீரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தள்ளப்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’’ என்றார். இதற்கு பதிலடி கொடுத்து இந்தியா சார்பில் பங்கேற்று பேசிய ஐநா.வுக்கான இந்திய பிரதிநிதி சீமா பூஜானி, ‘‘பாகிஸ்தானில் இன்று எந்த ஒரு மத சிறுபான்மையினரும் சுதந்திரமாக வாழவோ அல்லது தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவோ முடியாது. அகமதியா சமூகத்தினர் அவர்களின் நம்பிக்கையை வெறுமனே கடைப்பிடிப்பதற்காக அரசால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில், பலவந்தமாக காணாமல் போனவர்கள் தொடர்பாக பாகிஸ்தானின் விசாரணைக் கமிஷன் 8463 புகார்களைப் பெற்றுள்ளது. பலூச் மக்கள் இந்த கொடூரமான சுமைகளை சுமந்துள்ளனர். பாகிஸ்தான் கிறிஸ்தவர்களை நடத்துவதும் மிக மோசமானது. அச்சமூகம் அடிக்கடி கொடூரமான தண்டனைச் சட்டங்கள் மூலம் குறிவைக்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக துப்புரவு வேலைகளை கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்குகின்றன.

இந்து, சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடக்கிறது. அச்சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை கட்டாயமாக மதம் மாற்றுவது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ராணுவத்தையோ நீதித்துறையையோ அவதூறு செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது’’  என்றார்.

Tags : Pak ,UN ,India , Pak in UN. India accuses minorities of not having freedom
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...