×

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் சரிவு: சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி

சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், கடந்த 11 நாட்களாக தக்காளி, வெங்காயம் உட்பட அனைத்து காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்கள், ஓட்டல், சிறு வியாபாரிகள் சந்தோஷம் அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் வருகிறது. இந்நிலையில், வரத்து அதிகரிப்பால் கடந்த 11 நாட்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து கடும் வீழ்ச்சியில் உள்ளது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், நேற்று காலை ரூ25க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ10க்கும்,  ரூ80க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ 50க்கும், நவீன் தக்காளி ரூ25லிருந்து ரூ23க்கும், நாட்டு தக்காளி ரூ25 லிருந்து ரூ20க்கும், கேரட் ரூ40ல்  இருந்து ரூ12க்கும், வெண்டைக்காய் ரூ80 லிருந்து ரூ50க்கும், பீன்ஸ் ரூ35 லிருந்து ரூ30க்கும், கத்திரிக்காய் ரூ35க்கும், காராமணி ரூ35க்கும் பாகற்காய் ரூ20க்கும், சுரைக்காய் ரூ15க்கும், சேனைக்கிழங்கு ரூ33க்கும், முருங்கைக்காய் ரூ60க்கும், சேனை கிழங்கு ரூ60க்கும், காலி பிளவர் ரூ20க்கும், வெள்ளரிக்காய் ரூ20க்கும், பட்டாணி ரூ30க்கும், பீர்க்கங்காய் ரூ30க்கும், நூக்கல் ரூ15க்கும், கொத்தவரங்காய் ரூ25க்கும் பச்சை குடமிளகாய் ரூ35க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபற்றி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும் போது, ‘‘வரத்து அதிகரிப்பு காரணமாக, கடந்த 11 நாட்களாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால்,  சென்னை மற்றும் புறநகர் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். குறைந்தவிலையில் காய்கறிகளை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.’’ என்றார்.

Tags : Koyambedu , Vegetable prices fall sharply in Koyambedu market due to increase in supply: Small traders are happy
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...