×

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்குப்படுவது போன்ற சில வீடியோக்களை திட்டமிட்டு சிலர் பரப்பி வந்தனர். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும், உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில், வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் அரசியலுக்காக இதுபோன்ற வதந்திகளை பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்த முயன்றது தெரியவந்தது.

உடனடியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தமிழகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டாவது நாளாக நேற்றும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாக சொல்வார்கள். வடமாநிலத்து பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது.

‘வாய் பேச முடியாத எனது குழந்தையை தூக்கிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழ்நாடு தான் காரணம்’’ என்று அளித்த பேட்டி, யாராலும் மறக்க முடியாதது. தாய் தமிழ்நாடு என்பது, மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணை தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்.

தமிழ்நாட்டிற்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது. கொரோனா 2வது அலையின்போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பச் செல்ல விரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறைகள், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன.

குடும்ப அட்டை இல்லாத, வேலைகளை இழந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இப்படி வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையை காணப் பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது.

இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கிறது. வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள்.

இல்லாத ஒரு பிரச்னையை வைத்து, இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வடமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள். இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள். தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். பீகாரை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததை போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது.

எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூக பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன்.

அனைத்து தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாக சொல்லி இருக்கிறேன். வளமான - அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Northern State ,Chief President ,G.K. Stalin , Strict legal action against those who spread rumors that workers are being attacked in the North: Chief Minister M. K. Stalin's warning
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...