பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; பெங்களூரில் 2 கொள்ளையர்கள் கைது: 2.5 கிலோ நகைகள் மீட்பு

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில், பெங்களூருவைச் சேர்ந்த 2 பேர் கைதாகியுள்ளனர். போலீசார் நெருங்குவதை அறிந்து இரண்டரை கிலோ நகைகளை காவல் நிலையத்தில் கொடுத்து கொள்ளையர்கள் சரணடைந்தது அம்பலமாகியுள்ளது. சென்னை பெரம்பூர் பேப்பர்மில்ஸ் சாலையில் அமைந்துள்ள, ஜே.எல். நகைக்கடையில் கடந்த மாதம் 10ம் தேதி வெல்டிங் மெஷினால்  ஓட்டைபோட்டு, 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. மேலும், டி.வி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, நகைக்கடையின் உரிமையாளர் ஜெயசந்திரனின் மகன் ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ரம்யா பாரதி ஆகியோர் மேற்பார்வையில்,  4 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த பதிவெண் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் தனிப்படை போலீசார் சந்தேகப்படும்படியான 2 நபர்களை பிடித்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்களுக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, திருவிக நகர் போலீசார் பிடிபட்ட 2 பேரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திவந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவன், மங்கிகுல்லா அணிந்து நகைக் கடைக்குள் செல்லும் சிசிடிவி கேமரா பதிவுகளும், திருத்தணி அருகே காரிலிருந்து இறங்கி டிபன் வாங்கிக்கொண்டு செல்லும் இருவரின் சிசிடிவி புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின.

இதனை வைத்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தநிலையில், பெங்களூருவில் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக நேற்று காலை தகவல்கள் வந்தன. கர்நாடக மாநிலம் தொட்டபட்டா புரம்  மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (31) அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (28) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று சென்னை அழைத்துவந்து திருவிக நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளதும், இந்த 6 பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபின்பு பெங்களூரு பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கி வந்துள்ளனர்.

போலீசார் எவ்வாறு இந்த வழக்கை எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்தும், போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் தினசரி டிவி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக அறிந்து வந்துள்ளனர். அப்போது, திருத்தணி பகுதியில் டிபன் வாங்கும்போது 2 பேரின் புகைப்படங்கள் சிசிடிவியில் வெளியானது குறித்த செய்தி அனைத்து நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்துள்ளது. இதனைப் பார்த்து கண்டிப்பாக பிடித்து விடுவார்கள் என்று எண்ணிய கொள்ளையர்கள், ஒரு மாஸ்டர் பிளான் திட்டத்தை அரங்கேற்றினர்.

அதன்படி,  இந்த வழக்கின் முக்கிய நபரான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் காவல் நிலையத்திற்குச் சென்று நாங்கள் இந்த நகைகளை திருடிவிட்டோம் என்று கூறி அந்த காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளனர். காவல் நிலையத்தில் இருந்தவர்களும் நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு செல்போன் டவர் லோகேஷன் மூலம் தனிப்படை போலீசார் கஜேந்திரன் மற்றும் திவாகரை மகாலட்சுமி லேஅவுட் போலீசார் உதவியுடன் நேற்று பிடித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் அருண் மற்றும் கவுதம் ஆகிய இருவர் தலைமறைவாக உள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கஜேந்திரன் மற்றும் திவாகர் ஆகிய இருவரிடமும் திருவிக நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஏற்கனவே பெங்களூரு போலீசாரிடம் மாட்டியுள்ள கங்காதரன் என்பது தெரியவந்தது. மற்றபடி நகைகளைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 2 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்த திருவிக நகர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களை நீதிமன்ற அனுமதியோடு காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மேலும் பல தகவல்கள் தெரியவரும் என கூறப்படுகிறது. இதேபோன்று ஏற்கனவே பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 22 நாட்களாக தமிழக போலீசார் தீவிரம் காட்டிவந்த பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் வெறும் இரண்டரை கிலோ தங்க நகைகளை மட்டும் போலீசாரிடம் கொடுத்துவிட்டு, திருடர்களே பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தனர்.

மாஸ்டர் பிளான்

பெங்களூரு காவல் நிலையத்தில் சரண் அடைந்த கங்காதரன் என்பவர், மாஸ்டர் பிளான் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி போலீசார் நெருங்குவதை அறிந்து  இரண்டரை கிலோ தங்க நகைகளை காவல் நிலையத்தில் கொடுத்து சரண்டர் ஆகிவிட்டால், கர்நாடக போலீசார்  நம் மீது எப்ஐஆர் போட்டு சிறையில் அடைத்து விடுவார்கள். அதன்பிறகு தமிழக போலீசார் நம்மை காவலில் எடுத்து மட்டுமே விசாரிக்க முடியும். இதுவே, சென்னை போலீசில் சிக்கினால் என்கவுன்டர் என பயந்து கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை மட்டும் காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டு சரண்டர் ஆகி உள்ளார். 2 பேர் தற்போது பிடிபட்டுள்ள நிலையில் மற்ற 2 பேரை பிடித்தால் மீதி நகைகள் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வெல்டிங் ஸ்பெஷலிஸ்ட்

கஜேந்திரன் என்பவர் ஐடிஐ படித்துள்ளார். இவர் வெல்டிங் வேலையில் கை தேர்ந்தவர். கொள்ளை சம்பவத்தன்று இவர்தான் குறிப்பிட்ட நகைக்கடையில் காஸ் உதவியுடன் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி, ஷட்டரை கட் செய்து எடுத்தார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யார் அந்த கருப்பு ஆடு

கொள்ளையடிக்கப்பட்ட கும்பல் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட கடைக்கு வந்து நோட்டம் பார்த்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட அந்தக் கடையை நோட்டமிட்டு அதே இடத்தை சுற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட கொள்ளையர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அவர் தூண்டுதலின் பேரில் கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

5 நாள் விசாரிக்க அனுமதி

கைதான கஜேந்திரன் மற்றும் திவாகரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவர்கள் இருவரிடமும் 5 நாட்கள் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

வண்டி எண் மாற்றம்

கொள்ளை சம்பவம் நடந்த மறுநாளே சிசிடிவியில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் கோயம்புத்தூரில் காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஆர்சி புக் திருடு போனதை கூறியுள்ளார். அவர் சொன்ன இடத்தில் 16 செல்போன் எண்கள் கிடைத்துள்ளன. அதில் சுவிட்ச் ஆப் ஆன நம்பர் கஜேந்திரனுடையது என போலீசார் கண்டனர்.

காரை மட்டும் பயன்படுத்தி போலீசாரை குழப்பிய கொள்ளையர்

கொள்ளை சம்பவம் நடந்த பின்பு பெரம்பூரில் இருந்து காரில் கிளம்பிய 6 பேரும் பெங்களூரு அருகே கோலார் என்ற இடத்தில் வண்டியை நிறுத்தி, கங்காதரன் மற்றும் கஜேந்திரன் ஆகிய இருவர் மட்டும் கொள்ளையடித்த நகைகளுடன் இறங்கிவிட்டனர். அதன் பின்பு மற்ற 4 பேரும் காரை மகாராஷ்டிரா வரை தொடர்ந்து ஓட்டிக்கொண்டே சென்றனர். ஒவ்வொரு டோல்கேட்டிலும் கார் பதிவெண் பதிவாகும் என்ற ரீதியில் மகாராஷ்டிரா வரை தொடர்ந்து பயணித்துள்ளனர். போலீசார் பல்வேறு இடங்களில் சிசிடிவியை பார்த்து கார் சென்று கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பின் தொடர்ந்து சென்றனர். மகாராஷ்டிராவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு அந்த 4 பேரும் பேருந்து மூலம் மீண்டும் பெங்களூர் வந்துவிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது - கூடுதல் கமிஷனர் அன்பு

சென்னை கூடுதல் கமிஷனர் அன்பு கூறும்போது, கஜேந்திரன், திவாகர் ஆகிய 2 பேர் பிடிபட்டுள்ள நிலையில், கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் ஏற்கனவே பெங்களூரு போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு போலீசாரிடம் 2.5 கிலோ தங்க நகைகள் சிக்கியுள்ளன. மேலும் கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஜேந்திரன், திவாகர் ஆகிய இருவரையும் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

Related Stories: