கேப்டன் ஹர்மன்பிரீத் அதிரடி ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் 207 ரன் குவிப்பு

மும்பை: குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான டபுள்யுபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக 65 ரன் விளாச, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் ஜயன்ட்ஸ் கேப்டன் பெத் மூனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். யஸ்டிகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் இருவரும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் இன்னிங்சை தொடங்கினர். யஸ்டிகா 8 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து தனுஜா கன்வார் பந்துவீச்சில் வேர்ஹம் வசம் பிடிபட்டார்.

இதையடுத்து, ஹேலி மேத்யூசுடன் நதாலியே ஸைவர் பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தனர். ஸைவர் 23 ரன்னில் வெளியேற, ஹேலி 47 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் 10 ஓவரில் 77 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் - அமெலியா கெர் இணைந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக, ஹர்மன்பிரீத் ஆட்டத்தில் அனல் பறந்தது. பவுண்டரிகளாக விளாசித் தள்ளிய அவர் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். ஹர்மன்பிரீத் - அமெலியா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 42 பந்தில் 89 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஹர்மன்பிரீத் 65 ரன் (30 பந்து, 14 பவுண்டரி) விளாசி ஸ்நேஹ் ராணா பந்துவீச்சில் ஹேமலதா வசம் பிடிபட்டார். பூஜா வஸ்த்ராகர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது. அமெலியா 45 ரன் (24 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), இஸ்ஸி வோங் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 2, வேர்ஹம், தனுஜா, கார்ட்னர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 208 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.

Related Stories: