×

இரானி கோப்பை கிரிக்கெட் ம.பி. அணிக்கு 437 ரன் இலக்கு

குவாலியர்: இதர இந்திய அணியுடனான இரானி கோப்பை போட்டியில், மத்திய பிரதேச அணிக்கு 437 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இதர இந்தியா முதல் இன்னிங்சில் 484 ரன் குவித்தது. ஈஸ்வரன் 154, ஜெய்ஸ்வால் 213, யஷ் துல் 55 ரன் விளாசினர். மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 294 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. யஷ் துபே 109, ஹர்ஷ் காவ்லி 54, சரன்ஷ் ஜெயின் 66 ரன் எடுத்தனர். இதையடுத்து, 190 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இதர இந்தியா 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 246 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் இம்முறை 144 ரன் (157 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்து அசத்தினார். கேப்டன் மயாங்க் அகர்வால் உள்பட 6 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ம.பி. பந்துவீச்சில் ஆவேஷ் கான், அங்கித் குஷ்வாஷ், சரன்ஷ் ஜெயின், ஷுபம் ஷர்மா தலா 2 விக்கெட், குமார் கார்த்திகேயா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 437 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்துள்ளது. அர்ஹாம் 0, ஷுபம் ஷர்மா 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஹிமான்ஷு மந்த்ரி 51 ரன், ஹர்ஷ் காவ்லி 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 356 ரன் தேவை என்ற நிலையில், ம.பி. அணி இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது.

Tags : Irani Cup , Irani Cup Cricket MP The target for the team is 437 runs
× RELATED இதர இந்தியா சாம்பியன்: இரானி கோப்பை கிரிக்கெட்