தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை,:சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். 7ம் மற்றும் 8ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்று, நாளை) பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சமாக வேலூர் விரிஞ்சிபுரத்தில் 12.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகபட்சமாக 1.6 செல்சியஸ் முதல் 3.0 செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பை விட 1.6. செல்சியஸ் முதல் 3.0 செல்சியஸ் வரை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: