சென்னை: சட்டம் - ஒழுங்கை கெடுக்கும் செயலில் ஈடுபட்டால் எந்தக் கொம்பனாக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தோழர் ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே.சுப்பராயன் எம்பி முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி வரவேற்புரையாற்றினார். தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடக்க உரையாற்றினார்.
தோழர் ப.மாணிக்கம் நூற்றாண்டு மலரை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வெளியிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகில் தலை சிறந்த மனிதர்களை மாணிக்கம் என்பார்கள். அந்தவகையில், பிறக்கும் போதே மாணிக்கமாக பிறந்தவர் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கம். அவரது நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாழ்கிறது என்றால் அவர்களின் கொள்கைகள் மட்டும் இல்லாமல், இது போன்ற தலைவர்களாலும் தான்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்பது தாயக வரலாறு, தியாகிகள் வரலாறு. கலைஞர் கருணாநிதியுடன் நட்பாக இருந்தவர் மாணிக்கம். அவர் மறைந்தார் என்ற தகவலை கேட்டவுடன் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி நம்முடைய ஒற்றுமைக்காக கிடைத்தது. இதை விட பெரிய காலம் நமக்கு காத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அமைந்த ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால் வெற்றி நிச்சயம். எவ்வளவு பிளவுபடுத்த முயன்றாலும் உங்களால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உடைக்க முடியாது.
மேலும், 2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் என்பது கொள்கை யுத்தம். இளைஞர்கள் அனைவரும் வந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு மார்க்ஸ் கொள்கை, பெரியார் கொள்கையை சொல்லி கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே ; நாடும் நமதே. மேலும், பீகார் மாநிலத்தில் இருந்து வந்து தொழில் செய்து கொண்டு இருப்பவர்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும், எந்தக்கொம்பனாக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
