அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ11 லட்சம் ஏமாற்றிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அதிரடி கைது: தலைமை செயலகத்தில் பணியாற்றி வருவது அம்பலம்

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ 11 லட்சம் ஏமாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘அதிமுக  ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் உதவியாளராக பணிபுரிந்தவர் ரவி. அவரிடம், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை நம்பிய நான், அரசு வேலை வாங்க ரூ11 லட்சத்தை ரவியிடம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு அவர் எனக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை.

போன் செய்தாலும் எடுக்காமல் இருந்தார். இதனால் நான், எனது பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால், அவர் எனக்கு பணத்தை திருப்பித் தராமல் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றி, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ரவி பணத்தை பெற்றுக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார், ரவி மற்றும் தரகர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக ரவியும், தரகராக செயல்பட்ட விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டதாக மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடநலத்துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.

Related Stories: