×

தென்மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த கள ஆய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை: கீழடி அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்கிறார்

மதுரை: தென்மாவட்டங்களின் மக்கள் நலத்திட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த 2 நாட்கள் நேரடி கள ஆய்வுக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அவைகளை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், ‘கள ஆய்வில் முதல்வர்’ என்னும் திட்டத்தை கடந்த பிப்.1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றைய தினமும் மறுநாளான பிப்.2ம் தேதியும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டார். இதன்படி, தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மதுரையில் நாளை (மார்ச் 5) மற்றும் நாளை மறுதினம் (மார்ச் 6) கள ஆய்வு செய்ய உள்ளார்.

இதற்காக நாளை (ஞாயிறு) காலை 9 மணிக்கு விமானம் மூலம் முதல்வர் மதுரை வருகிறார். விமான நிலையத்தில், மதுரை மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் நாளை மாலை 4 மணிக்கு, மதுரை கலெக்டர் அலுவலகத்தில், தென்மண்டல ஐஜி, மதுரை மாநகர கமிஷனர், டிஐஜிக்கள், ஐந்து மாவட்ட எஸ்பிகள் அடங்கிய போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். இதில், சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் துறை ரீதியாக ஆய்வு செய்கிறார். பின்பு மாலை 5 மணிக்கு கீழடியில் கட்டப்பட்ட தொல்லியல் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இரவு மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை மறுநாள் (மார்ச் 6) காலை 9.30 மணிக்கு, ஐந்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் முடிவுற்ற நலத்திட்ட பணிகள் மற்றும் நடந்து வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இதைத் ெதாடர்ந்து தொழில் வர்த்தக சங்கத்தினர், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார். தொடர்ந்து அரசு நலத்திட்ட திட்டப்பணிகள் குறித்து அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்கிறார்.  இது குறித்து மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் அரசு திட்டங்கள் முறையாக நடந்து வருகிறதா, மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் முதல்வரும், குழுவினரும் ஆய்வு நடத்துகின்றனர். மேலும், தொழில் வர்த்தக சங்கத்தினர், மகளிர் குழுவினர், விவசாயிகளிடம் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்’ என்றார்.

Tags : Chief President ,South District ,G.K. Stalin ,Madurai , Chief Minister M.K.Stalin to visit Madurai tomorrow for field study of development works in Southern District: Keezadi Museum will also be inaugurated
× RELATED தொடரும் இலங்கைக் கடற்படையின்...