வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகிலேயே அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா: ஒருபக்கம் இந்தியா, சீனா நட்புக்கரம்; மறுபக்கம் மேற்கத்திய நாடுகள் கடுப்பு

புதுடெல்லி: உக்ரைன் மீதான போரால் உலகிலேயே அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் நட்புடன் இருப்பதால் மேற்கத்திய நாடுகள் கடுப்பில் உள்ளன. பொதுவாக எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் இறையாண்மை விதிகளை  மீறினால் சம்பந்தப்பட்ட நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது  வழக்கம். நேரடியாக நாடுகள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை காட்டிலும்,  பொருளாதார தடைகள் விதிப்பது குறிப்பிட்ட அந்த நாட்டை தனிமைப்படுத்த உதவும்  என்று சர்வதேச நாடுகள் பின்பற்றும் முறையாகும். இதன்மூலம்  தனிமைப்படுத்தப்பட்ட நாடுகள் குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத்  திரும்பும் என்று கணிக்கப்படுகிறது. அந்த வகையில் வர்த்தக தடை முக்கிய  பங்கு வகிக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை நம்பி  இயங்குகிறது என்று வைத்துக் கொண்டால், அந்த நாட்டிடம் இருந்து மற்ற நாடுகள்  எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் நிலைமை என்னவாகும்? மற்ற நாடுகள் வேறு  நாட்டிலிருந்து எண்ணெய் வாங்கும், ஆனால் ஏற்றுமதியை நம்பியுள்ள நாடு  எண்ணெய் இருப்புக்களை கையாள முடியாது அல்லது அதை விற்பதன் மூலம் பணம் ஈட்ட  முடியாது. இதுபோன்று மற்றப் பொருட்களின் வளத்தை நம்பியுள்ள நாடுகளுக்கும்  ஏற்படும். அதனால் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பது என்பது தவிர்க்க முடியாத  ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி முதல் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் படைகள் போர் தொடுத்துள்ளன. ஓராண்டை கடந்துவிட்ட நிலையில் நிலைமை இன்னும் சீராகவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தாலும், உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களையும், பொருளாதார உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.

கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கி இந்தாண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜப்பான், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் 10,608 தனி நபர்களுக்கு தடைகளை விதித்துள்ளன. மேலும் 3,431 நிறுவனங்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளன என்று ‘ஸ்டேடிஸ்டா’ ஆராய்ச்சித் துறையின் அறிக்கை கூறுகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், அமெரிக்காவின் நிர்பந்தத்தினாலும் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பல நாடுகள் எண்ணெய் அல்லது ஆயுத வர்த்தகத்தை காலவரையின்றி தடை செய்தன. மேலும் பல நாடுகள் ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன. இன்னும் சில நாடுகள் ரஷ்ய அதிபர் புடின் அல்லது அந்நாட்டின் பிற தலைவர்களை தங்கள் நாட்டிற்கு வர அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளன.

அதாவது ரஷ்ய தலைவர்கள், நிபுணர்கள் போன்றோருக்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார தடைகள் மட்டுமின்றி, சர்வதேச வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்ய வங்கிகள் நிலைமை சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண ரஷ்ய குடிமக்கள் கூட இங்கிலாந்து போன்ற நாடுகளின் வங்கியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டதை விட அதிக பணம் எடுக்க முடியாது. ரஷ்யாவின் பெரிய வர்த்தக பட்டியலில் எண்ணெய், எரிவாயு, தொழில்நுட்பம், ஆயுதங்கள் சப்ளை ஆகியன உள்ளன. இன்றைய நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. ரஷ்ய ஆலைக்கான திட்டத்தை ஜெர்மனி நிறுத்தி விட்டது. ஐரோப்பிய ஒன்றியம் நிலக்கரி வாங்குவதை நிறுத்திவிட்டது.

இதுபோன்ற சர்வதேச நெருக்கடிகளால் ரஷ்ய வணிகர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ரஷ்ய பொருளாதாரத்தை நிர்வகிப்பவர்கள், அதிபர் புடினுடன் நல்லுறவில் இருப்பவர்கள் ஆவர். இத்தனை நெருக்கடிக்கும் மத்தியில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. உலக அரங்கில் ரஷ்யா மட்டுமின்றி வட கொரியா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் மீதும் ஆயிரக்கணக்கான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட நாடுகள் ஏதாவது ஒருவகையில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் இந்தியாவும், சீனாவும், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன. அதாவது மேற்கண்ட இருநாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் கொண்டு வரப்படும் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்க வில்லை. நடுநிலை வகித்து வருகின்றன. அதனால் இந்தியா - ரஷ்யா - சீனாவின் உறவுகள் மேற்கத்திய நாடுகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: