புதுடெல்லி: இந்தியாவில் ‘ஹால்மார்க்’ அடையாள எண் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களை வரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதன்படி தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
அவற்றில் இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும். இதற்காக தங்க நகை வர்த்தகர்கள், ஹால் மார்க் மையங்களில் பதிவு செய்ய வேண்டும். இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்கநகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் ஒன்றிய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. குறு தொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தரச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணங்களில் 80 சதவீதம் வரை சலுகைகளை அறிவிக்கவும், விற்பனையாகும் தங்க நகைகளின் தரத்தை ஒழுங்குப்படுத்தவும் ‘ஹால்மார்க்’ அடையாள எண் கொண்ட நகைகளின் விற்பனையை மட்டும் அனுமதிப்பது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து நுகர்வோர் நலத் துறை கூடுதல் செயலாளர் நிதி காரே கூறுகையில், ‘நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த ‘ஹால்மார்க்’ அடையாள எண்ணைப் பதிக்கும் திட்டம் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 256 மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, வரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, தனித்துவமான 4 அல்லது 6 இலக்க ‘ஹால்மார்க்’ அடையாள எண்கள் (ஹெச்யூஐடி) பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருள்களை வரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். 2022-23ம் ஆண்டில் மட்டும் இன்று வரை (நேற்று) 10.56 கோடி தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டது’ என்றார்.