சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்தவர் மற்றும் இடைத்தரகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஹனிபா என்ற இடைத்தரகர் ஆசைவார்த்தை கூறினார். மேலும் தரகர் ஹனிபா மற்றும் ஆக்டிங் டிரைவர் விஜய் ஆகிய இருவர் மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த ரவி என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
அவர் அரசு வேலை வாங்கித் தர ரூ.11 லட்சம் செலவாகும், தனக்குப் பலதுறைகளைச் சேர்ந்த அமைச்சர்களைத் தெரியும் என்பதால் எந்த துறையிலும் வேலைவாங்கித் தருவேன் என கூறினார். இதை நம்பி ரூ.11 லட்சம் கொடுத்தேன். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு அரசு வேலைவாங்கித் தராமல் அலைக்கழிக்க விட்டார். அதனால் பணத்தைத் திருப்பித்தருமாறு ஹனிபா, ரவியிடம் கேட்ட போது என்னை மிரட்டினார்கள். இவ்வாறு மனுவில் முத்துலட்சுமி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முத்துலட்சுமி பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மீது போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாஜி அமைச்சரின் உதவியாளர் ரவி, பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து ரவி மற்றும் இடைத்தரகர் விஜய் ஆகியோரை மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் நேற்றிரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவி தற்போது, தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் ஏஎஸ்ஓவாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த போது அவருக்கு உதவியாளராக இருந்த ரவி பணியிட மாற்றம் செய்து தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், மருத்துவக்கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாகவும் கூறி பல பேரிடம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மோசடி வழக்கில், அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளரும், இடைத்தரகரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.