×

காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி-கேமரா அமைத்து கண்காணிக்க வனத்துறை முடிவு

காங்கயம் : காங்கயம் அருகே 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகள் பலியாகின. சிறுத்தை நடமாட்டம் இல்லை என்றும் கேமரா வைத்து கண்காணிக்க உள்ளதாகவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.காங்கயம் அருகே செம்மங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(58). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் காலை 7 மணியளவில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை பார்க்க வந்தார். அப்போது பட்டியில் அடைத்து வைத்திருந்த 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காயங்களுடன் இருந்த 10 ஆடுகளில் 4 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது. மீதம் இருந்த 6 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு என்னவாக இருக்கும் என சந்தேகத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வெறிநாய்கள் கடித்தது போல் இருப்பதாக தெரிவித்தனர். இதேபோல் ஊதியூர் பகுதியிலும் ஒரு விவசாயின் பட்டியில் இருந்த ஒரு ஒரு ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது தொலைவில் சென்று போட்டு விட்டு சென்றுள்ளது. இதுகுறித்தும் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்தும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து காங்கயம் வனத்துறையினர் கூறியதாவது:

காங்கயம் அருகே செம்மங்காளிப்பாளையம் மற்றும் ஊதியூர் பகுதியில் ஆடுகளை கடித்து குதறியது வெறி நாய்களாக இருக்க வாய்ப்புள்ளது. மர்ம விலங்கு சிறுத்தையாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு, இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. சம்மந்தப்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் வெறிநாய்கள் தவிர வேறு ஏதாவது மர்ம விலங்கு நடமாட்டம் தெரிகிறதா என கண்காணிக்க உள்ளோம். தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும், என காங்கயம் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Kangayam , Kangayam: More than 10 goats were bitten by rabid dogs near Kangayam. 5 goats were killed in this. There is no leopard movement
× RELATED தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து