அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட் விழுப்புரம் - பாணாம்பட்டு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் :  விழுப்புரம், பாணாம்பட்டு பகுதியில் அடிக்கடி புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே அப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விழுப்புரம் உள்ளது. இங்கிருந்து நாட்டின் தலைநகர் மற்றும் மும்பை, பெங்களூர், கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அருகில் உள்ள புதுச்சேரிக்கு தினசரி யூனிட் ரயில்களும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் முக்கிய பகுதியாக விழுப்புரம் பாணாம்பட்டு பகுதி உள்ளது. இந்த சாலை வழியாக பண்ருட்டி, கடலூர் மார்க்கத்திற்கு செல்லவும், சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக உள்ளன. மேலும் நகர பகுதிக்குள் இந்த ரயில்வே கேட் அமைந்துள்ளது. தினசரி 10 முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன.

குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி துவங்கும்போது இரண்டு, மூன்று முறை மூடப்படுவதால் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலையும், வேலைக்கு செல்பவர்களும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். தற்போது இந்த நேரம் வீணாவதை தவிர்க்கவும், விபத்துக்களை தடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைத்து வருகின்றனர். அதன்படி இந்த பகுதியில் முக்கியத்துவம் கொடுத்து முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக ரயில்வே சுரங்க பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: