சென்னை- வாணியம்பாடிக்கு சென்றபோது பார்சல் சர்வீஸ் லாரியில் தீப்பிடித்து ₹15 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம் -வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு

வேலூர் : சென்னையில் இருந்து வாணியம்பாடிக்கு சென்ற பார்சல் சர்வீஸ் லாரியில், வேலூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்து ₹15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன், பார்சல் சர்வீஸ் லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னையில் இருந்து வாணியம்பாடிக்கு மளிகை, மருந்து உட்பட பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 6 மணியளவில் வேலூர் கொணவட்டத்திற்கு வந்தது. அப்போது லாரியின் பின்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. அவ்வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர் இதுகுறித்து பாஸ்கரனுக்கு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பாஸ்கரன், உடனடியாக லாரியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொணவட்டம் சர்வீஸ் சாலையில் ஓரமாக நிறுத்தியுள்ளார். அதற்குள் லாரியில் இருந்து தீ வேகமாக பரவியது.

இதுகுறித்து வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் லாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சேதமானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில்,‘ லாரியில் எப்படி தீ பரவியது என்பது குறித்து தெரியவில்லை.  இந்த லாரி மூலம் தினந்தோறும் சென்னை-வாணியம்பாடி, திருப்பத்தூருக்கு பார்சல் சர்வீஸ் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு மளிகை பொருட்கள், மருந்துகள், உணவு பொருட்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடியில் உள்ள கடைகளுக்கு கொண்டு செல்ல வந்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சேதமான பொருட்களின் மதிப்பு ₹15 லட்சம் வரை இருக்கும்’ என்றனர்.

Related Stories: