ஓசூர் சானமாவு பகுதியில் வயல்வெளியில் சுற்றி திரியும் ஒற்றை யானை-விவசாயிகள் அச்சம்

ஓசூர் : ஓசூர் சானமாவு பகுதியில் காலை 9 மணி வரை, வயல்வெளியில் ஒற்றை யானை சுற்றித் திரிவதால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே போடூர்பள்ளம் அருகில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சுமார் 80 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் இரவு நேரங்களில், வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விட்டு, அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தன.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 80 யானைகளையும் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வழியாக பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த யானை கூட்டத்தில் இருந்து, 5 யானைகள் தனியாக பிரிந்து வந்து, ஓசூர் சானமாவு பகுதியில் முகாமிட்டு, தனித்தனியாக பிரிந்து சுற்றி வருகின்றன. இதில் ஒரு யானை, வனப்பகுதி ஒட்டியுள்ள பென்னிக்கல், சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ேநற்று காலை, பென்னிக்கல் பகுதியில் நுழைந்த ஒற்றை யானை, காலை 9 மணி வரை விவசாய நிலத்திலேயே சுற்றி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இரவில் மட்டும் கிராமங்களுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டு, அதிகாலையில் வனப்பகுதிக்கு சென்ற யானைகள், தற்போது காலை 9 மணி வரை, விவசாய நிலங்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அதிகாலை நேரத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் போதும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் போதும் விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: