சென்னை: தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு வாரம் மற்றும் பாதுகாப்பு மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் ஆண்டு தோறும் மார்ச் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று 52வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தின நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாாரத்துறை இயக்குநர் செந்தில்குமார், இயக்கக அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு பிரிவு செயலாளர் ராஜ்மோகன் பழனிவேலு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, அரசு கூடுதல் செயலாளர் முகமது நசிமுத்தின் தலைமையில் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர் தொழிலாளர்கள் பணியிடங்களில் பாதுகாப்பாக பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் தேசிய பாதுகாப்பு தினத்தினை சிறப்பிக்கும் விதமாக பாதுகாப்பு வாரம் மற்றும் பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்பட உள்ளது. பாதுகாப்புடன் பணிபுரிவதை எடுத்துரைக்கும் வகையில் வினாடி வினா, பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளது. விபத்துகளை குறைத்து சிறப்பாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு விருதுகளும், பாதுகாப்பு உற்பத்தி திறன் மேம்பாடு குறித்து சீரிய ஆலோசனைகளை வழங்கும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உயர்ந்த உழைப்பாளர் விருதுகளும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
